"அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன்?..." - வானதி சீனிவாசன்.

"அரசே மதுவிற்கும் நிலையில் கள்ளச்சாராய சாவுகள் ஏன்?..." - வானதி சீனிவாசன்.
Published on
Updated on
2 min read

கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியானதற்கு தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். தொடர்ந்து  பேசிய அவர், 

இதுகுறித்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் ஒரே நாளில், கள்ளச்சாராயத்திற்கு 11 பேர் பலியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாகவும்,  தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இல்லைஎன்றும் குற்றம் சாட்டினார். மேலும், தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் நிறுவனம் நடத்தும் மதுக்கடைகள் எங்கும் நிறைந்திருப்பதனால் தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் அதிகமாகி ஏராளமான சீரழிவுகள் ஏற்படுகின்றன. விபத்துகளும் அதிகரிக்கின்றன என்று கூறினார். 

அதனைத் தொடர்ந்து,  வளர்ச்சி அடைந்த மாநிலம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழ்நாட்டில் தான் இளம் விதவைகள் அதிகம் இருக்கின்றனர் என்றும், இதற்கு அரசே மதுக் கடைகளையும், மதுபான பார்களையும் நடத்துவது தான் காரணம் எனவும் கூறினார். மேலும், இவற்றையெல்லாம் எடுத்துக்கூறி முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க. அரசை வலியுறுத்தினால், மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகமாகிவிடும் என்று எப்போதும் ஒரு காரணத்தை கூறுவார்கள் எனவும்  சாடினார். 

"ஆனால், இப்போது மதுவிலக்கு அமலில் இல்லாத நிலையில், எங்கும் தாராளமாக மது கிடைக்கும் நிலையில், ஒரே நாளில் இரு இடங்களில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; இதற்கு தமிழ்நாட்டை ஆளும் தி.மு.க. அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும். ஒரு சில காவல்துறை அதிகாரிகளை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்து தப்பித்து விடலாம் என நினைப்பது தவறு. காவல்துறைக்கு பொறுப்பு வைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்", என்றும் கூறினார். 

மேலும் அவர்,  அரசே மது பானங்களை விற்கும் நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி, விற்கப்படுவது ஏன்? டாஸ்மாக் மது கடைகளில் வாங்காமல், கள்ளச்சாராயம் வாங்குவது ஏன்..?  என்பதற்கான காரணங்களை தமிழக அரசு கண்டறிய வேண்டும். இதற்கு வறுமை மிகமிக முக்கிய காரணம். எனவே கிராமங்களில் வறுமையை போக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். 

அதோடு,  சில சுயநல சக்திகள், அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு, அதிகாரத்தில் இருப்பவர்களின் துணையுடன் கள்ளசாராயம் காய்ச்சுவது போன்ற சட்ட விரோத, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சும் சமூக விரோதிகளையும் அவர்களின் பின்னணியில் இருக்கும் அரசியல், அதிகார பலம் கொண்டவர்களை கண்டறிந்து இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும், கள்ளச்சாராயம் தொடர்பான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து, தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் இல்லாத நிலையை  உருவாக்க வேண்டும் எனவும் கோரினார்.

தமிழ்நாட்டில் மதுவிலக்கு துறை தான், டாஸ்மாக் மது கடைகளையும் நடத்துகிறது. அத்துறையின் அமைச்சரான திரு செந்தில் பாலாஜி அவர்கள், டாஸ்மாக் மது கடைகளில் விற்பனையை அதிகப்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை, கள்ளச்சாராயம் இல்லாத நிலையை உருவாக்குவதிலும் காட்டியிருக்க வேண்டும் எனவும் விமர்சித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com