
இந்தப் போராட்டம் நடத்துபவர்களை துறை சார்ந்த அமைச்சர் வந்து பார்க்கவில்லை. சேகர்பாபுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? குப்பை அள்ளுவதையும் அறநிலையத்துறை தான் பார்க்கிறதா? என்று சீமான் கேள்வி.
திமுக விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்கிறது என்பது பெரும் உண்மை சீமான் விமர்சனம்.
தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணிநிரந்தரம் செய்யக்கோரியும் நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கப் பேரவை நடத்தும் கண்டன ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார்.
அப்போது ஆர்பாட்டத்தில் தூய்மைப் பணியைத் தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணியாளர்களை பணிநிரந்தரம் செய்யக்கோரியும் முழக்கங்களை எழுப்பினார்கள்.
முன்னதாக, தனியார்மயத்தைக் கண்டித்தும் பணி நிரந்தரம் கோரியும் தொடர்ச்சியாக ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது,
“தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, 13 ஆண்டுகள் சென்னை மாநகராட்சித் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றி வந்தவர்களை திடீரென்று பணிநீக்கம் செய்தது வேதனை அளிக்கிறது. நெருக்கடியான காலகட்டங்களில் பணியாற்றவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இந்த நகரத்தைச் சுத்தமாக்கும் பணியை தனியாருக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் இந்த மாநகராட்சி எதற்கு இருக்க வேண்டும் கலைத்துவிடலாம்? மாநகராட்சிக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வது எதற்கு?
தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கு அரசு ஒரு ஆண்டுக்கு 270 கோடி கொடுக்கிறது. குப்பை அள்ளுவதைக் கூடத் தனியாருக்குக் கொடுத்துவிட்டு உங்களுக்கு என்ன வேலை? அரசு சுயமாக என்னதான் செய்யும்? கல்வி, போக்குவரத்து, மருத்துவம் உள்ளிட்டவற்றைத் தனியாரிடம் கொடுத்துவிட்டு, சாராயக்கடைகளை மட்டும் அரசே நடத்தும் என்பதை சமூகம் ஏற்கிறதா?
12 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்பவர்களை பணி நிரந்தரம் செய்வதில் உள்ள இடையூறு என்ன?மகளிர் உரிமைத்தொகை, மாணவர்களுக்கான உதவித் தொகை கொடுக்கிறார்கள். அதிக செலவில் நூலகம், கலையரங்கம் கட்டுகிறார்கள். ஆனால் நிதி பற்றாக்குறை என்று கூறுகிறார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் ஏன் போராடும் மக்களுடன் வரவில்லை?
தனியார் நிறுவனத்திடம் போராடினால் தமிழர்களை வெளியேற்றிவிட்டு வட இந்தியர்களைத் தூய்மைப் பணியில் அமர்த்துவார்கள். தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் தனியாருக்கு கொடுப்பது கொள்கை முடிவா அல்லது கொள்ளையா?
இந்தப் போராட்டம் நடத்துபவர்களை துறை சார்ந்த அமைச்சர் வந்து பார்க்கவில்லை. சேகர்பாபுவிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? குப்பை அள்ளுவதையும் அறநிலையத்துறை தான் பார்க்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியில் பல மண்டலங்களை தனியாருக்கு கொடுத்தபோது அதை மாற்றவோம் என்று தானே ஆட்சிக்கு வந்தீர்கள்?
ஓரணியில் தமிழகம் வந்து குப்பை அள்ளுமா? போராடும் மக்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்ற ஒரு பிரச்சனைக்காகவாது இந்த அரசு முன்வந்துள்ளதா?நிரந்தரப் பணியாளர்களாக்கினால் அவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டும். அதற்கு அரசிடம் காசு இல்லை.
ஓரணியில் தமிழ்நாட்டின் மூலம் காசு கொடுப்பதற்கு எங்கிருந்து பணம் வந்தது? இவ்வளவு சிக்கனமாக அக்கறையாகவும் நிர்வாகம் செய்யும் நீங்களா 10 லட்சம் கோடி கடனுக்கு கொண்டு சென்றீர்கள்? திமுக விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்கிறது என்பது விமர்சனமா? உண்மையா? திமுக விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்கிறது என்பது பெரும் உண்மை.
உங்களுடன் ஸ்டாலின், வீடு தேடி அரசு, நான் முதல்வன் என்பதற்கெல்லாம் பெரிய அளவில் செலவு செய்கிறார்கள்.
இவர்களுக்கு சேவை அரசியல் செயல் அரசியல் தெரியாது. திராவிட மற்றும் இந்தியக் கட்சிகள் செய்தி அரசியல் மட்டும் தான் செய்யும். தேர்தல் அரசியல் கட்சி அரசியல் தான் செய்யும் மக்கள் அரசியல் செய்யாது. வெற்று வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றும்.
ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றுங்கள்.
தேர்தல் ஆணையம் தொடர்பாக ராகுல்காந்தி வைத்துள்ள விமர்சனம் சரிதான், அவர் தகுந்த ஆதாரங்களோடு கூறுகிறார். அந்த நிலைமை நாடெங்கும் வருவதற்கு முன்பு மக்கள் விழிப்புற்று என வேண்டும்.
வட இந்தியர்கள் வாக்கு பெறுவது என்பது நாடாற்றவர்களாக நாங்கள் விரைவில் ஆக்கப்படுவோம் என்பதற்குச் சான்று. தமிழர் அரசுதான் இதைப்பற்றி கவலைப்படும், திராவிட அரசியல் பற்றி கவலைப்படாது.
போராடும் சொந்த நாட்டு மக்களை காப்பாற்ற முடியவில்லை, கியூபாவை காப்போம் என்று முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.