தமிழகத்தில் ஜனநாயகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்த நிலையில், இளம் வாக்காளர்கள் பெரும் திரளாக வந்து வாக்களித்தனர். வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற கடமை உணர்வுகள் மாறி, தற்போது, இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் What's App Status வைப்பதற்கும், நானும் வாக்களித்தேன் என்பதை இணையதளத்தில் பதிவிடவுமே அதிகம் விரும்புகின்றனர்.
தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெற்ற நாளில் இருந்து, பெரும்பாலும், அனைவரின் What's App Status-சும், ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட மையாகத்தான் உள்ளது. ஆம் நமது இடது கையின் ஆட்காட்டி விரலில் வைக்கப்படும் அழியாத மை, "நானும் ஜனநாயக கடமை ஆற்றினேன்" என்பதை நமக்கு நினைவூட்டி வருகிறது. இந்த அழியாத மை வைக்கும் பழக்கம் எப்போது தொடங்கியது…? அது எப்படி அழியாமல் உள்ளது…? தெரியுமா உங்களுக்கு…?
தேர்தலில் வாக்களிப்பதற்கு முன்பு, நமது தரவுகள் எல்லாம் சரிபார்க்கப்பட்டு, பின்னர் அனைத்தும் சரி என்றதும், நமது இடது கை ஆள்காட்டி விரலில் ஒரு மை தீட்டப்படுகிறது. இந்த மை குறைந்தது 2 முதல் 4 வாரங்கள் வரை அழியாமல் உள்ளது. தேர்தலின் போது, வாக்களித்ததற்கான அடையாளமாகவும், மீண்டும் வாக்களிக்க முடியாத வகையிலும், இந்த அழியாத மை பயன்படுத்தப்படுகிறது.
இந்த மை வைக்கும் பழக்கம் முதன் முதலில் 1962-ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. அப்போது நடைபெற்ற மக்களவைத் தேர்தலில்தான் முதலில் மை வைக்கும் பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது உள்ளது போல் வாக்காளர் அடையாள அட்டை எல்லாம் அப்போது இருந்திருக்கவில்லை. இதனால் வாக்களித்ததற்கான அடையாளமாகவும், ஒருவர் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்பதற்கான இந்த மை வைக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டது.
ஆனால், தற்போது வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்ட பின்னரும், இந்த மை வைக்கும் நடைமுறை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த மை, விரைவில் அழியாமல் இருப்பதற்கு காரணம் சில்வர் நைட்ரேட் என்ற வேதி பொருள்தான். திரவ வடிவில் இருக்கும் இந்த மை விரலில் தடவிய உடன் தோலில் உள்ள உப்பு மற்றும் சூரிய ஒளியுடன் சேர்ந்து சில்வர் குளோரைடாக, மாறி அடர்ந்த ஊதா அல்லது கருப்பு நிறத்தில் மாறிவிடுகிறது.
தேசிய இயற்பியல் ஆயவகத்தால் உருவாக்கப்பட்ட இந்த மை, இந்தியாவிலேயே, கார்நாடக மாநிலம் மைசூரில் உள்ள, பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட் என்ற அரசு நிறுவனத்தில் மட்டுமே தயாரிக்கிறது. மேலும், இந்த நிறுவனத்திற்கு மட்டுமே இந்த மை தயாரிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்…
1937-ம் ஆண்டு, அப்போதைய மைசூர் மகாராஜாவாக இருந்த நல்வாடி கிருஷ்ணராஜ உடையாரால் மைசூர் 'லாக் மற்றும் பெயின்ட் ஒர்க்ஸ்' - `மைசூர் அரக்கு மற்றும் பெயின்ட் பணி' - என்ற பெயரில், இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.1989-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் பெயர் `மைசூர் பெயின்ட்ஸ் மற்றும் வார்னிஷ் லிமிடெட்' என்று மாற்றப்பட்டது.மேலும், தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற 30க்கும் மேற்பட்ட வெளி நாடுகளுக்கும், இந்த மை ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.
தேர்தலில் கள்ள ஓட்டுகள் பதிவாவதைத் தடுப்பதற்காகவும், ஏற்கனவே அந்த நபர் வாக்கு செலுத்திவிட்டார் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவும் இந்த அடையாள மையைத் தேர்தல் ஆணையம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறது.இப்படி நமது விரலில் வைக்கப்பட்ட இந்த மை, இரண்டு, முதல் 4 வாரங்களுக்கு நமது ஜனநாயகத் திருவிழாவை, நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்