அமைச்சர் துரைமுருகன் தனது மகளை ரகசியமாக காதலனுடன் பேச அனுமதிப்பாரா? என உத்திரமேரூரில் முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அக்கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
உத்திரமேரூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசாணி மங்கலம், மேலனூர், காவனூர் புதுச்சேரி, கட்டியாம்பந்தல் கூட்ரோடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் முன்னாள் அமைச்சரும் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அமைச்சர் வி.சோமசுந்தரம், தமிழகத்தை ஆளுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சர் என்றும் தனது அமைச்சர்களின் அடாவடி தனத்தை அடக்க முடியாதவர் என்றும் குற்றம்சாட்டினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு திமுகவின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக அரசு மாணவிகளுக்கு கொடுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து உங்களுடைய பெற்றோர்களுக்கு தெரியாமல் உங்கள் காதலனுடன் ரகசியமாக பேசலாம் என்று கூறியதை சுட்டிக்காட்டிய அவர் "அமைச்சர் துரைமுருகன் அவரது மகளை அவரது காதலனுடன் ரகசியமாக பேச அனுமதிப்பாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, பேரூர் கழக செயலாளர் ஜெய விஷ்ணு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.