

மேகதாது அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனப் பிரதமர் முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் பேசியது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் குழு காவிரியில் கர்நாடகா அரசு அணைக்க காட்டுவதாக இருக்கும் இடத்தைப் பார்வையிட்டது. அப்போது 'இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியில்லை ' என அணைக்கட்டும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினார் முதலமைச்சர் விஜய். ஆனால் கர்நாடக அரசு தொடர்ந்து காவிரியில் அணைக்கட்டும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதன் பகுதியாகவே டி. கே. சிவகுமாரின் பேச்சும் அமைந்துள்ளது.
இந்தநிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா.
அவரது அறிக்கையில், "கர்நாடகாவில் காங்கிரஸ் கட்டும் மேகதாது அணை... அதற்கு தமிழ்நாட்டின் தவெக அரசு துணையா?
கூட்டணியைக் காப்பாற்றக் காவிரியைத் தாரைவார்க்கப் போகிறீர்களா?" எனக் கேள்வி எழுப்புகிறார்.
"காவிரி நமக்கு ஓர் ஆறு மட்டுமல்ல. அது, தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வு. ஒவ்வோர் ஆண்டும் காவிரியில் நமது உரிமையை பெறுவதற்கே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், மேகதாது அணையை கட்ட தீவிர காட்டிக் கொண்டிருக்கிறது கர்நாடகா காங்கிரஸ் அரசு.
"மேகதாது அணை கட்ட நாங்கள் அனுமதி கேட்கத் தேவையில்லை" என்று கொக்கரிக்கிறார் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார். இது அண்டை மாநிலமான நமக்கு சொல்லப்பட்ட செய்தி அல்ல. ’’சட்டத்தையே மதிக்க மாட்டோம்’’ என்ற புறக்கணிப்புதான் இதில் புதைந்து கிடக்கிறது. காங்கிரஸ் தயவில்தானே தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கிறது என்ற துணிச்சல்தான் இப்படி பேச வைக்கிறது.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் திருத்தி உறுதிசெய்ததன்படி, பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி. நீர் கிடைப்பது சட்டப்பூர்வமான உரிமை!
மேகதாது அணையைக் கட்ட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் எந்த நிபந்தனையற்ற அனுமதியையும் வழங்கவில்லை என்பதே உண்மை! காவிரி நீரின் மீது தமிழ்நாட்டின் சட்டரீதியான உரிமைகள் பலமாக உள்ளன.
குறித்த காலத்தில் காவிரி நீர் கிடைக்காவிட்டால், காவிரி டெல்டாவின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.
மேல்படுகை மாநிலமான கர்நாடகா, கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டுக்கு "நன்மை செய்கிறேன்" என்று சொல்லி மொத்த காவிரி நீரையும் தன் கட்டுப்பாட்டியில் வைத்துக் கொள்ள பின்னப்பட்ட சதிதான் மேகதாது அணை!
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சி, வெறும் பேச்சோடு நிற்கவில்லை. திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பிப்பு, திட்டத்துக்கு விரைந்து அனுமதி கோரி ஒன்றிய அரசிடம் முறையீடு, வனம், நிலம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க முயற்சி, சுற்றுச்சூழல் அனுமதி என அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் முறைப்படுத்தி, ஒரு திட்டமிட்ட நகர்வை நோக்கி கர்நாடகா முன்னேறிக் கொண்டிருக்கிறது.
திராவிட மாடல் அரசில் கடுமையான சட்ட முன்னெடுப்புகள் மூலம் கர்நாடக அரசுக்கு கடிவாளம் போடப்பட்டது. இப்பொழுது ஆட்சி மாறியதும், காட்சிகளும் மாறிவிட்டன.
இப்பொழுது தமிழ்நாடு அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு கூட காட்டமான பதிலை சொல்ல முடியாமல் பம்மி கிடக்கிறது, டம்மி அரசாங்கம்!
தவெக அரசின் கள்ள மெளனம் ஏன் என்பதுதான் ஒட்டுமொத்த விவசாயிகளின் கேள்வியாக இருக்கிறது.
கர்நாடகத்தில் மேகதாது அணை திட்டத்தை முன்னெடுப்பது காங்கிரஸ் அரசு. தமிழ்நாட்டில் அதே காங்கிரஸ், ஆட்சியில் பங்கு வகிக்கிறது. உக்கிரமாக எதிர்க்க வேண்டிய விவகாரத்தில் தமிழ்நாட்டை ஆளும் டம்மி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
காவிரி என்ன கர்நாடகத்தின் குடும்பச் சொத்தா? மேலே இருப்பவர்கள் அணை கட்டுவதும், கீழே இருப்பவர்கள் தண்ணீருக்காகக் கையேந்துவதும்தான் கூட்டாட்சித் தத்துவமா?
கூட்டணி தர்மத்துக்காகத் தமிழ்நாட்டின் நீர் உரிமையில் சமரசம் செய்து கொண்டிருக்கிறதா விஜய் அரசு? கர்நாடக காங்கிரஸ் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்றுதான் விஜய் மென்மையான போக்கோடு நடந்து கொள்கிறாரா?
’’உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க’’னு திரையில விஜய் பேசிய வசனத்தை கூட தரையில பேச முடியாத கோழையாக இருக்கிறார். காவிரியில் நமது உரிமையை நிலைநாட்டும் துணிச்சல் முதல்வருக்கு இருக்கிறதா? தமிழ்நாட்டின் நீருரிமையைப் பறிக்கத் துடிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையும், அதன் முதல்வரையும் எப்படிக் கையாளப் போகிறார்?
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்த பிரச்சினை குறித்து தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமன்ற தீர்மானத்தில் திருத்தமாகவும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும், டெல்டா விவசாயிகளை முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை தவெக அரசு எப்போது செய்யப்போகிறது.
சி.எம் சார்... உங்களுக்கு முக்கியம் கூட்டணியா? காவிரியா? தமிழ்நாட்டின் விவசாயிகள் முக்கியமில்லையா? கூட்டணியைக் காப்பாற்ற காவிரியைத் தாரைவார்க்க போகிறீர்களா?
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு அணை... அதற்கு தமிழ்நாட்டின் தவெக அரசு துணையா? காவிரியா… காங்கிரஸா? என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்!
மேகதாதுவில் கர்நாடகா கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடு போல, அதனை எதிர்க்கும் விஷயத்தில் தமிழ்நாட்டிலும் இருக்க வேண்டும் அல்லவா! ஆனால், இங்கே என்ன நடக்கிறது? கூட்டணிக்காக தமிழ்நாட்டின் உரிமையை சமரசம் செய்யும் நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
காங்கிரஸ் தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் இரட்டை வேடம் போடுகிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது. கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கிறது. ராகுல் காந்தி அவர்களே உங்கள் நிலைப்பாடு என்ன?
தமிழ்நாட்டின் காவிரி நீருரிமையைப் பாதுகாப்பீர்களா? அல்லது கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது திட்டத்துக்கு துணை நிற்பீர்களா?
தமிழ்நாட்டை வஞ்சிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டத் தொடர்ந்து முயற்சித்து வரும் கர்நாடக முதலமைச்சர் திரு. டி.கே.சிவகுமார் அவர்களின் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ்நாட்டின் விவசாயிகளின் நலனையும், எங்களது சட்டப்பூர்வமான காவிரி நீருரிமையையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்." என கடுமையாக சாடியுள்ளது.