தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ள நடிகர் விஜய்யின் குடும்ப விவகாரம், தற்போது ஒரு அரசியல் யுத்தமாகவே மாறியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், நாளை (மார்ச் 4) தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே பிரம்மாண்டமான "நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை" நடத்தவிருக்கிறார். ஆனால், இந்தக் கூட்டம் அரசியல் நோக்கங்களை விட, கடந்த சில நாட்களாக அவரது மனைவி சங்கீதா சுமத்தியுள்ள கடுமையான புகார்களுக்கு விஜய் என்ன பதில் சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பினால் ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடும்பப் பிரச்னையா? திட்டமிட்ட சதியா?
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி, விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்ததாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த மனுவில், விஜய் மீது "துரோகம்" மற்றும் "மற்றொரு நடிகையுடன் தொடர்பு" உள்ளிட்ட மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளை அவர் அடுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. 1999-ல் தொடங்கிய இவர்களது 27 ஆண்டுகால மணவாழ்க்கை, விஜய் அரசியலில் நுழைந்த பிறகு இவ்வளவு பெரிய விரிசலைச் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, விஜய்யின் அரசியல் வளர்ச்சியைப் பிடிக்காத "திமுக" பின்னணியில் இருந்து கொண்டு சங்கீதாவைத் தூண்டிவிடுவதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். இது ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்னை என்பதைத் தாண்டி, விஜய்யின் "தூய சக்தி" பிம்பத்தை உடைக்க திமுக கையாளும் ஒரு கீழ்த்தரமான அரசியல் யுக்தி என தவெக நிர்வாகிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
விஜய்யின் முதல் பொதுத் தோற்றம்
சங்கீதாவின் விவாகரத்து மற்றும் புகார் தொடர்பான தகவல்கள் வெளியான பிறகு, விஜய் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும். செங்கிப்பட்டி அருகே சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக க்யூஆர் (QR) கோடுடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முந்தைய கூட்டங்களில் "தீய சக்தி" என திமுகவை நேரடியாகத் தாக்கிப் பேசிய விஜய், தற்போது தனது சொந்த வாழ்க்கையையே குறிவைத்துத் தாக்கப்படும் இந்தச் சூழலில் இன்னும் ஆவேசமாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. "என் மீது கல் எறிந்தால் அதை வைத்து நான் கோட்டை கட்டுவேன்" எனப் பேசும் விஜய், தன் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க நடப்பதாகச் சொல்லப்படும் இந்த அரசியலுக்கு செங்கிப்பட்டி மண்ணில் சாட்டையடி பதில் கொடுப்பாரா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி.
சங்கீதா vs தவெக தொண்டர்கள்
சங்கீதாவின் புகாருக்குப் பிறகு, தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் திமுகவையும், சங்கீதாவையும் கடுமையாகச் விமர்சித்து வருகின்றனர். "2021-ல் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, விஜய் அரசியலில் உச்சம் தொடும்போது இப்போது கிளப்புவது ஏன்?" என்பதே இவர்களின் பிரதானக் கேள்வி. திமுகவின் ஐடி விங் (IT Wing) மூலம் சங்கீதாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு, இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன. ஒருபுறம் தனிப்பட்ட ஒழுக்கம் குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், மறுபுறம் விஜய்க்கு ஆதரவான அலை சமூக வலைதளங்களில் வீசி வருகிறது.
அரசியல் ஆய்வாளர்களின் கணிப்புப்படி, விஜய் இந்தக் கூட்டத்தில் தன் மீதான தனிப்பட்ட புகார்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், "அரசியல் பழிவாங்கல்" என்ற கோணத்தில் இதைக் கையாள வாய்ப்பிருக்கிறது. "எனது அரசியல் பயணத்தைத் தடுக்க என் குடும்பத்தையே சீண்டுகிறார்கள்" என்று அவர் உணர்ச்சிவசமாகப் பேசினால், அது தொண்டர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் இடையிலான மோதல் முற்றியுள்ள நிலையில், தஞ்சாவூர் மண்ணில் இருந்து விஜய் எழுப்பப்போகும் குரல் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். செங்கிப்பட்டி நிர்வாகிகள் கூட்டம் என்பது வெறும் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மட்டுமல்ல; அது விஜய்யின் தனிப்பட்ட கௌரவத்தை நிலைநாட்டும் ஒரு முக்கிய மேடையாகவும் மாறியிருக்கிறது. நாளை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இந்தச் சந்திப்பின் இறுதியில், விஜய் தனது மௌனத்தைக் கலைப்பாரா அல்லது தனது அரசியல் பாணியிலேயே இதைக் கடந்து செல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.