கிங் மேக்கராக மாறுவாரா விஜய்? புதுச்சேரி தேர்தல் முடிவுகளில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்!

ஆளும் கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை என்ற வரலாற்றை ரங்கசாமி தற்போது மாற்றத் துடிக்கிறார்...
vijay in puducherry
vijay in puducherry
Published on
Updated on
2 min read

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கான முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், தற்போதைய முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்கள் புதுச்சேரியின் நீண்டகால அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதுச்சேரியைப் பொறுத்தவரை பொதுவாக ஒருமுறை ஆட்சி செய்த கட்சியே மீண்டும் வெற்றி பெறுவது கடினம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், ரங்கசாமி இந்த சவாலை முறியடிப்பாரா என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக உள்ளது.

இந்தத் தேர்தலில் முக்கியமாக இரண்டு பெரிய கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி நிலவுகிறது. ஒருபுறம் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் என்டிஏ (NDA) கூட்டணி களம் காண்கிறது. இதில் ரங்கசாமியின் கட்சி 16 இடங்களிலும், பாஜக 10 இடங்களிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயகம் கட்சி தலா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மறுபுறம் 'இந்தியா' (INDIA) கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், திமுக 14 இடங்களிலும் களம் இறங்கியுள்ளன. கடந்த 2006-ஆம் ஆண்டு காங்கிரஸிற்குப் பிறகு எந்தவொரு ஆளும் கட்சியும் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில்லை என்ற வரலாற்றை ரங்கசாமி தற்போது மாற்றத் துடிக்கிறார்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) இந்த முறை ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. வெறும் 30 தொகுதிகளை மட்டுமே கொண்ட சிறிய சட்டமன்றம் என்பதால், எந்தவொரு கூட்டணிக்கும் பெரும்பான்மைக்குத் தேவையான 16 இடங்கள் கிடைக்காத பட்சத்தில், தவெக ஒரு 'கிங் மேக்கர்' இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இது தவிர, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கியுள்ள லட்சிய ஜனநாயகம் கட்சியும் இந்த முறை கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது. புதுச்சேரியைச் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போல மாற்றுவோம் என்ற வாக்குறுதியுடன் அவர் களம் இறங்கியுள்ளார்.

புதுச்சேரி மக்கள் எப்போதுமே தேர்தலில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள். அந்த வகையில் இந்த முறை 91.23 சதவீத வாக்குகள் பதிவாகி ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது. இவ்வளவு அதிகமான வாக்குப்பதிவு ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருக்குமா அல்லது மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்துள்ளார்களா என்பது இன்று மதியத்திற்குள் தெரிந்துவிடும். பெரும்பாலான எக்சிட் போல் கணிப்புகள் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றே தெரிவித்துள்ளன. குறிப்பாக ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் ரங்கசாமி தலைமையிலான கூட்டணிக்கு 16 முதல் 20 இடங்கள் வரை கிடைக்கலாம் எனக் கணித்துள்ளது.

மக்கள் பல்ஸ் (People Pulse) மற்றும் பிரஜா போல் போன்ற பிற கணிப்புகளும் ரங்கசாமியின் வெற்றிக்கே அதிக வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளன. அதே சமயம் காங்கிரஸ்-திமுக கூட்டணி 6 முதல் 12 இடங்கள் வரை பிடித்து கடும் போட்டியைத் தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் புதுச்சேரியில் தனது கணக்கைத் தொடங்குமா என்பதில் கணிப்புகளிடையே முரண்பாடுகள் இருந்தாலும், சில இடங்களில் அக்கட்சி கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனத் தெரிகிறது. எது எப்படியோ, புதுச்சேரியின் 'மக்கள் முதல்வர்' ரங்கசாமி மீண்டும் அரியணையில் ஏறுவாரா அல்லது புதுச்சேரி தனது பழைய வழக்கப்படியே ஆட்சி மாற்றத்தைத் தருமா என்பது இன்னும் சில மணி நேரங்களில் உறுதியாகிவிடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com