ஓபிஆர் மீது பெண் புகார்; "பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" ஜெயக்குமார் வலியுறுத்தல்!

ஓபிஆர் மீது பெண் புகார்; "பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்" ஜெயக்குமார் வலியுறுத்தல்!
Published on
Updated on
1 min read

தேனி மக்களவை தொகுதி முன்னாள் உறுப்பினர் ஓபிரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாருக்கு காவல்துறையினர் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார், கடலில் பேனா சிலை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக தவறான தகவலை திமுக அரசு தெரிவித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை தவறாக தெரிவித்து இருக்கின்றனர் என்றும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் எது  வந்தாலும் அதை எதிர்கொள்ள  அதிமுக தயாராக உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்

தினசரி தங்கம் விலையில் மாற்றம் இருப்பதை போல தக்காளி விலையில் மாற்றம் இருந்து வருகிறது எனக் கூறிய அவர் விலைவாசி, சட்டம் ஒழுங்கு ஆகியவை திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் மக்களை பாதித்து வருகிறது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த ஜெயக்குமார் அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

அதேபோன்று டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணிக்கு வந்தால் அதிமுக இருக்குமா? என்கின்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார் அந்த சூழல் வருகின்றபோது அது குறித்து அதிமுக முடிவு எடுக்கும் என்றும் கூறினார். மேலும் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அண்மையில் நடத்திய போராட்டங்களில் அதிமுக கொடி மற்றும் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க உள்ளோம் என்றார்.

தொடர்ந்து ஒ பி ரவீந்திரநாத் விவகாரம் தொடர்பாக பேசிய அவர், ஓ பி ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஓபிஎஸ் இன் மகன் என்பதால் பாரபட்சம் காட்டாமல் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com