

சென்னை புழுதிவாக்கம் ஏரிக்கரைத் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சித் தொடக்கப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வரும், உள்ளகரம் நியூ இந்தியன் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 09.10.25 அன்று காலை வகுப்பறையில் பேனாவைத் திறந்த போது, 'மை' சட்டை, பாவாடை மற்றும் தரையில் கொட்டி இருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை இந்திரா காந்தி, தரையைத் துடைக்கும் கட்டையால் சிறுமியைக் கடுமையாக தாக்கியதில் அந்த சிறுமி படுகாயம் அடைந்துள்ளார்.
தற்போது கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். பேனா மை கொட்டியதற்காக ஆத்திரமடைந்து 9 வயது சிறுமியை கடுமையாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கோர சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிய்வத்துள்ளார், “இந்த கோர செயலில் ஈடுபட்ட அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது தமிழ்நாடு காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
அப்பகுதியை சேர்ந்த திமுக வட்டச்செயலாளரும், 186 -வது வட்ட மாமன்ற உறுப்பினருமான மணிகண்டன் தலையீடு காரணமாகவே அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறதா?. அல்லது பாதிக்கப்பட்ட சிறுமி ஆதித்தமிழ்க்குடி என்பதால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில் பாகுபாடு காட்டுகிறதா? என்ற அப்பகுதி மக்கள் எழுப்பும் கேள்விகள் மிகமிக நியாயமானதேயாகும்.
சிறுமியின் கடுமையான உடல்நலப்பாதிப்பு குறித்த புகாரை ஏற்க மறுத்து, இதுவரை வழக்கு பதியாதது ஏன் என்ற கேள்விக்கு தமிழ்நாடு அரசு என்ன பதில் கூறப்போகிறது? திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் என்றால் ஒரு நீதி? அதிகாரம் மிக்கவர்கள், வசதி படைத்தவர்கள் என்றால் வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காத்த சமூகநீதியா? பெற்றுத்தந்த சமத்துவமா? வெட்கக்கேடு!
ஆகவே, சென்னை புழுதிவாக்கத்தில் 5 ஆம் வகுப்பு சிறுமியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது உடனடியாக வழக்கு பதிந்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.