

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேலூர் கார்த்திகேயன். அணைக்கட்டு ஏபி நந்தகுமார், காட்பாடி துரைமுருகன், கே.வி.குப்பம் மருத்துவர் ராஜேஸ்வரி, குடியாத்தம் தேமுதிக வேட்பாளர் பிரதாப் ஆகியோரை ஆதரித்து பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று ஆதரவு திரட்டினார். “இந்திய விடுதலைக்கான புரட்சி துவங்கிய இந்த வேலூர் மண்ணிலிருந்து, டெல்லியின் ஆதிக்கத்திற்கு எதிராக தீர்ப்பு எழுத உங்கள் ஆதரவைக் கேட்டு வந்துள்ளேன்” என பிரசார உரையை தொடங்கினார் ஸ்டாலின்.
“தமிழ்நாட்டை ஒரு மாநிலமாக மட்டும் பார்க்க முடியாது; இது எட்டு கோடி மக்களின் உரிமைக் குரல். கிராமங்களில் இருந்து கோட்டை வரை உதயசூரியனுக்கே ஆதரவு உள்ளது. ‘இது நம்ம காலம், இறங்கி ஆடுங்க தலைவரே’ என்று மக்கள் சொல்கிறார்கள். இறங்கி ஆட நான் தயாராக இருக்கிறேன். திராவிட மாடல் 2.0 ஆட்சிக்கு நீங்கள் தயாரா?” என கேள்வி எழுப்பி கூட்டத்தை உற்சாகப்படுத்தினார்.
மத்திய அரசையும், பாஜக தலைவர்களையும் நேரடியாக விமர்சித்த அவர், “தமிழ்நாட்டை தவறாக கணக்கிடாதீர்கள். எங்கள் தன்மானத்தின் மீது கை வைத்தால், டெல்லியில் இருக்கும் உங்கள் ஆணவத்திற்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தார். மேலும், குறித்து, “நாவை அடக்கி பேச வேண்டும்; மரியாதை கொடுத்தால் தான் மரியாதை கிடைக்கும்” என கடுமையாக தாக்கினார். மேலும் அவர் வாய்கொழுப்போடு பேசிவருவதாக விமர்சித்தார். அதே நேரத்தில், தமிழகத்தின் வரலாற்று தலைவர்களை நினைவு கூர்ந்த அவர், “தந்தை பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் இல்லை என்று நினைக்காதீர்கள். அவர்கள் அனைவரின் முழு உருவமாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்” எனக் கூறி தன்னம்பிக்கை வெளிப்படுத்தினார்.
அதிமுக மீது தாக்குதல் நடத்தும் வகையில், எடப்பாடி பழனிசாமி குறித்து, “திராவிடமும் தெரியாது, அண்ணாவும் தெரியாது, மண்ணும் தெரியாது, ஒன்னும் தெரியாது” என கடுமையாக விமர்சித்தார். மேலும், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு அளித்தது அதிமுக தான் என குற்றம்சாட்டி, “அதிமுக எதிர்த்து இருந்தால் அந்த சட்டமே தமிழகம் வந்திருக்காது” என்று தெரிவித்தார். சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து பேசும்போது, “உங்களுக்கு அநீதி நடந்தால் பாதுகாப்பாக நிற்பது திமுக தான். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தி போராடியது நாங்கள்தான்” எனக் கூறினார்.
தொடர்ந்து பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருவதாகவும், “தமிழ்நாட்டின் பாதி பகுதிகளை ஏற்கனவே சுற்றி வந்துவிட்டேன். தினமும் ஆயிரக்கணக்கான மக்களை சந்திக்கிறேன். அவர்கள் அனைவரும் இந்த வளர்ச்சி பயணம் தொடர வேண்டும் என்று சொல்கிறார்கள்” என அவர் குறிப்பிட்டார். இறுதியாக, “திராவிட மாடல் 2.0 ஆட்சியில் எங்களுடைய சாதனைகளை நாங்களே முறியடிப்போம்… கியாரண்டி!” என உறுதியளித்து, திமுக கூட்டணிக்கு ஆதரவு வழங்குமாறு மக்களிடம் கையெடுத்து வேண்டுகோள் விடுத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.