
விசிகவின் துணைப் பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ஆட்சியில் பங்கு தேவை என்பது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன், கடந்த செப்டம்பர் மாதம் கருத்து தெரிவித்திருந்தார். இந்த சூழலில் அக்டோபர் மாதம் நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய், திமுகவை சாடியது மட்டுமில்லாமல், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என பேசியிருந்தார். விஜய்யின் இந்த கருத்தை, விசிகவின் ஆதவ் அர்ஜூனா வரவேற்றிருந்தார்.
இந்த நிலையில்தான் கடந்த 6-ஆம் தேதி அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரபல வார இதழ் மற்றும் ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில், தவெக தலைவர் விஜய் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். அப்போது பேசிய ஆதவ் அர்ஜூனா, பிறப்பால் முதலமைச்சரை உருவாக்கும் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் என திமுகவை கடுமையாக சாடியிருந்தார். கூட்டணியில் இருக்கும்போதே, திமுகவை ஆதவ் அர்ஜூனா விமர்சித்து பேசியது, கூட்டணிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியது.
திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்கு கடும் எதிர்வினை ஆற்றினர். விசிக தலைவர் திருமாவளவனும், ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விரைவில் முடிவு செய்யப்படும் என கூறியிருந்தார். இந்த நிலையில், ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து, திருமாவளவன் அறிவித்துள்ளார். கட்சித் தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி, ஆதவ் அர்ஜூனா எதிர்மறையாக செயல்பட்டு வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.