36 வயதில் முதல்வர் பதவி! ஆஸ்திரேலியாவில் ஆட்சியை மாற்றிய முதல் பெண் தலைவர் ஜெஸ் வில்சன்!

ஜெஸ் வில்சனின் அரசியல் பயணமும் குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு விக்டோரியா மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், குறுகிய காலத்திலேயே கட்சியில் முக்கிய இடத்தைப் பிடித்தார்.
Jess Wilson
Jess Wilson
Published on: 
Updated on: 
2 min read

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாண அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த தொழிலாளர் கட்சியைத் தோற்கடித்து, லிபரல் மற்றும் நேஷனல் கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் லிபரல் கட்சித் தலைவர் ஜெஸ் வில்சன் விக்டோரியா மாகாணத்தின் அடுத்த முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். இதன் மூலம் அந்த மாகாணத்தில் மக்களின் நேரடி வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைக்க உள்ளார். மேலும், தனது 36 வயதில் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளதால், விக்டோரியாவின் இளம் வயது முதல்வர்களில் ஒருவராகவும் அவர் இடம்பிடிக்கிறார்.

ஆஸ்திரேலியாவின் முக்கிய மாகாணங்களில் ஒன்றான விக்டோரியாவில் நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் ஆளும் தொழிலாளர் கட்சிக்கும் எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் முடிவுகள் வெளியாகத் தொடங்கியபோது லிபரல் கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது எனத் தேர்தல் கணிப்பாளர்கள் தெரிவித்தனர். இறுதியில், லிபரல் கூட்டணி ஆட்சியை அமைக்கும் நிலையை எட்டியதால் 12 ஆண்டுகால தொழிலாளர் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இந்தத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களிடம் அதிருப்தி அதிகரித்திருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மாநிலத்தின் கடன் சுமை, அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்கள், வீட்டு வசதிப் பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவுகள் முக்கியத் தேர்தல் பிரச்சினைகளாக அமைந்தன. மெல்போர்ன் நகரில் நீண்ட காலம் நீடித்த கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களின் செலவுகள் தொடர்பான விமர்சனங்களும் ஆளும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஜெஸ் வில்சன் தனது தேர்தல் பிரசாரத்தில் மாநிலத்தின் சாலைகளில் உள்ள பள்ளங்களைச் சரிசெய்வது, குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் மாநிலத்தின் கடன் சுமையைக் குறைப்பது போன்ற வாக்குறுதிகளை முன்வைத்தார். மேலும், அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சில திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருந்தார். இந்த அணுகுமுறை வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்ததாகக் கூறப்படுகிறது.

ஜெஸ் வில்சனின் அரசியல் பயணமும் குறிப்பிடத்தக்கது. 2022ஆம் ஆண்டு விக்டோரியா மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், குறுகிய காலத்திலேயே கட்சியில் முக்கிய இடத்தைப் பிடித்தார். 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விக்டோரியா லிபரல் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இதன் மூலம் அந்தக் கட்சியை வழிநடத்திய முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். தற்போது தேர்தல் வெற்றியின் மூலம் மாகாணத்தின் முதல் மக்கள் தேர்ந்தெடுத்த பெண் முதல்வராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து பேசிய ஜெஸ் வில்சன், தன் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். மாநிலத்தில் மீண்டும் நம்பிக்கையை உருவாக்கவும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பாடுபடுவதாக உறுதியளித்தார். அதே நேரத்தில், மாநிலத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைச் சரிசெய்ய கால அவகாசம் தேவைப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்தத் தேர்தல் முடிவு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் மட்டுமல்லாமல், அந்நாட்டின் அரசியல் சூழலிலும் முக்கியமான மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. முதல் பெண் முதல்வர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க உள்ள ஜெஸ் வில்சன், தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றப் போகிறார் என்பதே தற்போது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.