

அமெரிக்காவின் அலாஸ்கா கடல் பகுதியில் நடந்த ஒரு மீன்பிடி பயணம், 15 வயது சிறுவனுக்கு மறக்க முடியாத துயரமான அனுபவமாக மாறியுள்ளது. சிறிய மீன்பிடி படகு ஒன்று கடலில் கவிழ்ந்த பிறகு, அந்த சிறுவன் சுமார் 62 மணி நேரம் கடும் குளிரான கடல் பகுதியில் உயிருடன் போராடியுள்ளார். அவருடன் சென்ற அவரது அண்ணனும் உறவினரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை முடிந்தவரை தன்னுடன் வைத்திருக்க முயன்றபடியே சிறுவன் மீட்புக்காக காத்திருந்தது இந்த சம்பவத்தின் சோகமான பகுதியாக உள்ளது.
அலாஸ்காவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் டெரெக் பார்க்கர் அக்னாங்கா. கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தனது அண்ணன் சிட்னி குலோவியி மற்றும் உறவினர் பார்டன் ரூக்கோக் ஆகியோருடன் சேர்ந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளார். அவர்கள் சென்றது அலாஸ்காவின் செயின்ட் லாரன்ஸ் தீவு அருகே உள்ள பெரிங் கடல் பகுதி. அந்த பகுதியில் மீன்பிடிப்பது அங்குள்ள மக்களின் வாழ்க்கை முறையுடன் நெருக்கமாக தொடர்புடையது. அன்றும் வழக்கமான மீன்பிடி பயணமாகவே அது தொடங்கியது. ஆனால் சில மணி நேரங்களுக்குப் பிறகு நிலைமை மோசமாக மாறியது. அவர்கள் சென்ற சிறிய படகில் இருந்த மீன்பிடி கம்பியின் நூல் இயந்திரத்தில் சிக்கியிருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதை சரி செய்ய முயன்றபோது கடலில் வானிலையும் மோசமடைந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் படகு திடீரென கவிழ்ந்தது. மூவரும் குளிர்ந்த கடலில் சிக்கினர். சம்பவம் நடந்த சரியான நேரம் குறித்து குடும்பத்தினரிடையே வெவ்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. கடலோர காவல்படையும் இதுவரை படகு கவிழ்ந்ததற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை உறுதி செய்யவில்லை.
படகு கவிழ்ந்ததும் சிட்னி குலோவியி அதற்குக் கீழே சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடலில் உயிரிழந்தார். டெரெக்கும் பார்டனும் கவிழ்ந்த படகின் மேல் ஏறி தங்களை காப்பாற்றிக் கொள்ள முயன்றனர். கடல் அலைகள் தொடர்ந்து படகைத் தாக்கிக் கொண்டிருந்தன. சுற்றிலும் பார்த்தால் கடல் மட்டுமே. உதவி எப்போது வரும் என்பதும் அவர்களுக்கு தெரியவில்லை. ஒரு கட்டத்தில் பார்டனாலும் அந்த கடுமையான சூழ்நிலையை சமாளிக்க முடியவில்லை. அவர் படகிலிருந்து கடலில் விழுந்து உயிரிழந்ததாக மீட்புக்குப் பிறகு டெரெக் கூறியுள்ளார். தனது அண்ணனும் உறவினரும் தன்னுடைய கண்முன்னே உயிரிழந்த நிலையில், டெரெக் மட்டும் அந்த கவிழ்ந்த படகின் மீது தொடர்ந்து இருந்துள்ளார். குடும்பத்தினர் கூறிய தகவலின்படி, அவர்கள் உயிரிழந்த பிறகும் அவர்களின் உடல்கள் தன்னைவிட்டு விலகிச் செல்லாமல் இருக்க சிறுவன் முடிந்தவரை பிடித்துக் கொண்டிருந்தார். பின்னர் கடல் நீரோட்டம் காரணமாக அவர்களை விட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அடுத்த 62 மணி நேரம் டெரெக்கின் வாழ்க்கையில் மிகவும் கடினமான நேரமாக இருந்தது. உணவு இல்லை. குடிக்க தண்ணீர் இல்லை. சுற்றிலும் கடுமையான குளிர்ந்த கடல். இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்தது. இருந்தாலும் அவர் கவிழ்ந்த படகை விடாமல் பிடித்துக்கொண்டு உயிருடன் இருக்க முயன்றார். அவரது குடும்பத்தினர் கூறியபடி, அந்த நேரத்தில் அவர் தொடர்ந்து பிரார்த்தனை செய்தபடியே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர்கள் திட்டமிட்ட நேரத்தில் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். தகவல் கிடைத்ததும் அலாஸ்கா மாநில அதிகாரிகள் அமெரிக்க கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் கடலில் தேடும் பணி தொடங்கியது. மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணியும் சவாலாக இருந்தது.
செப்டம்பர் 7ஆம் தேதி காலை, கடலோர காவல்படையின் விமானக் குழுவினர் கடலில் ஒரு கவிழ்ந்த படகு இருப்பதை கவனித்தனர். அந்த இடத்தில் ஒரு மனிதர் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அருகில் இருந்த ‘Northwest Explorer’ என்ற மீன்பிடி கப்பலுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த கப்பலில் இருந்த குழுவினர் அந்த சிறுவனை நோக்கி சென்றனர். சுமார் நான்கு மைல் தொலைவில், செயின்ட் லாரன்ஸ் தீவின் கிழக்குப் பகுதியில் கவிழ்ந்த படகின் மேல் சிறுவன் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கப்பல் அருகில் சென்றபோது, முதலில் கடலில் இருந்த ஒரு பொருள் போலவே சிறுவன் தெரிந்துள்ளார். பின்னர் அது மனிதர் என்பதை குழுவினர் அறிந்தனர். உடனடியாக அவரை படகில் ஏற்றினர். அப்போது டெரெக் கடுமையான குளிரால் உடல் வெப்பநிலை குறைந்த நிலையில் இருந்தார். பல மணி நேரம் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் இருந்ததால் உடலில் நீர்ச்சத்தும் குறைந்திருந்தது. உடனடியாக போர்வைகள் மற்றும் தேவையான முதலுதவி வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்படி மீட்புக் குழுவினர் பார்த்துக் கொண்டனர். பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
மீட்கப்பட்டபோது, தனது அண்ணன் இன்னும் கவிழ்ந்த படகுக்கு கீழே இருப்பதாகவும், தனது உறவினர் முந்தைய இரவில் படகிலிருந்து கடலில் விழுந்ததாகவும் டெரெக் மீட்புக் குழுவினரிடம் தெரிவித்துள்ளார். கடும் குளிரால் அவரது பற்கள் நடுங்கிக் கொண்டிருந்த நிலையிலும் அவர் நடந்ததை விளக்கியதாக மீட்புக் கப்பலின் கேப்டன் ஆடம் வைட் தெரிவித்துள்ளார். இந்த காட்சியை பார்த்த மீட்புக் குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் டெரெக் உயிர் தப்பியது அவரது குடும்பத்துக்கு ஒருபுறம் மிகப்பெரிய நிம்மதியாக இருந்தாலும், அண்ணனையும் உறவினரையும் இழந்த துயரம் மறுபுறம் உள்ளது. குடும்பத்தினரும் அவர்களது சமூகமும் இரண்டு உயிர்களை இழந்திருக்கின்றனர். கடலின் ஆபத்தையும், எதிர்பாராத நேரத்தில் ஒரு சாதாரண பயணம் எப்படி உயிருக்கு போராட்டமாக மாறிவிடும் என்பதையும் இந்த சம்பவம் காட்டியுள்ளது. 15 வயதிலேயே இத்தனை கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு உயிருடன் திரும்பிய டெரெக்கின் அனுபவம் தற்போது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்