ஊழியர்களுக்கு 20 வார சம்பளம் போனஸ்! இப்படி கொட்டிக்கொடுக்க உண்மையிலேயே நல்ல மனசு வேண்டும்!

திட்டமிடப்பட்ட 13 வார போனஸை விட கூடுதலாக இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது
emirates group
Published on
Updated on
1 min read

துபாயின் முன்னணி விமான நிறுவனமான எமிரேட்ஸ் குரூப், இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் 20 வார கால சம்பளத்தை போனஸாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இலக்குகளைத் தாண்டி அபார லாபம் ஈட்டியுள்ளதால், முதலில் திட்டமிடப்பட்ட 13 வார போனஸை விட கூடுதலாக இந்தத் தொகை வழங்கப்பட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்தியை எமிரேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சையத் அல் மக்தூம் ஊழியர்களுக்கு உருக்கமான கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

மார்ச் 2026-ன் நினைவுகள் மாறினாலும், அந்த கடினமான காலத்தில் ஊழியர்கள் காட்டிய தைரியத்தையும் மன உறுதியையும் ஒருபோதும் மறக்க முடியாது என்று ஷேக் அகமது குறிப்பிட்டுள்ளார். நிறுவனத்தின் வரலாற்றிலேயே மிகவும் சிக்கலான சூழலில் ஊழியர்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கு தாம் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உலகிலேயே அதிக லாபம் ஈட்டும் விமான நிறுவனம் என்ற பெருமையை எமிரேட்ஸ் தக்கவைத்துக் கொண்டதோடு, வரிக்கு முந்தைய லாபத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டில் எமிரேட்ஸ் நிறுவனம் தனது பழைய நிதி சாதனைகள் அனைத்தையும் முறியடித்துள்ளது. முதல் 11 மாதங்கள் திட்டமிட்டபடி சென்றாலும், மார்ச் மாதம் ஏற்பட்ட எதிர்பாராத சூழல்களைச் சமாளித்து மீண்டும் தனது சேவைகளை வெற்றிகரமாகத் தொடங்கியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கடுமையான சவால்களுக்கு மத்தியிலும், நிறுவனத்தின் கையிருப்பு நிதி இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. துபாயிலும் மற்ற நாடுகளிலும் தவித்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பாக வீடு சேர்க்க ஊழியர்கள் இரவு பகலாக உழைத்ததை அவர் பாராட்டியுள்ளார்.

எமிரேட்ஸ் மற்றும் துபாயின் வளர்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது என்று விமர்சனம் செய்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒவ்வொரு நெருக்கடிக்குப் பிறகும் நாங்கள் முன்பை விட வலிமையாகத் திரும்புவோம் என்று ஷேக் அகமது கூறியுள்ளார். எரிபொருள் விலை உயர்வு மற்றும் காப்பீட்டுச் செலவுகள் போன்ற சவால்கள் இருந்தாலும், எமிரேட்ஸ் நிறுவனம் விரைவில் தனது முழு அளவிலான விமானச் சேவைகளைத் தொடங்கும் என்றும், புதிய விமானங்களை வாங்கும் பணிகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். ஊழியர்கள் அனைவரும் துபாயின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து, தங்களின் சிறந்த பணியைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com