

ரஷ்ய கோடீஸ்வரர் அலெக்ஸி மொர்தாஷோவ் என்பவருக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் பிரம்மாண்ட சொகுசு கப்பல் 'நார்ட்', கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றத்தால் முடங்கிக் கிடக்கும் இந்த முக்கிய கடல் வழிப்பாதையில், மிகச் சில கப்பல்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படும் நிலையில், இந்தச் சொகுசு கப்பல் அந்தப் பகுதியைக் கடந்தது தற்போது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுமார் 465 அடி நீளம் கொண்ட இந்த சொகுசு கப்பலின் மதிப்பு 500 மில்லியன் டாலருக்கும் (சுமார் 4,200 கோடி ரூபாய்) அதிகம் என்று சொல்லப்படுகிறது.
கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, துபாயில் இருந்து வெள்ளிக்கிழமை மதியம் புறப்பட்ட இந்த 'நார்ட்' கப்பல், சனிக்கிழமை காலை ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓமனின் மஸ்கட் நகரை அடைந்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான மோதலால் இந்த கடல் வழிப்பாதை கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த முக்கியமான பாதையை ஒரு உல்லாசக் கப்பல் எப்படிப் பயன்படுத்தியது என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்யாவின் முக்கியத் தொழில் அதிபரான மொர்தாஷோவ் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. அவர் ரஷ்ய அதிபர் புதினுக்கு நெருக்கமானவர் என்று அறியப்படுகிறார். இந்த 'நார்ட்' கப்பலின் அதிகாரப்பூர்வ உரிமையாளராக மொர்தாஷோவ் பெயர் இடம்பெறவில்லை என்றாலும், 2025-ஆம் ஆண்டு கார்ப்பரேட் பதிவுகளின்படி, இந்தக் கப்பல் அவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பது உறுதியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கருத்து தெரிவிக்க மொர்தாஷோவ் தரப்பு மறுத்துவிட்டது.
ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நீண்டகாலமாக நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. குறிப்பாக 2025-ஆம் ஆண்டில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்குப் பிறகு, இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உளவு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடைந்துள்ளதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. ஒருபுறம் அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ள நிலையில், ரஷ்யக் கப்பல் மட்டும் பாதுகாப்பாக இந்தப் பாதையைக் கடந்தது சர்வதேச அரசியலில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஈரானிய வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராக்சி, அதிபர் புதினைச் சந்திக்க ரஷ்யா சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய சொகுசு கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படும் 'நார்ட்', 20 பிரம்மாண்ட அறைகள், நீச்சல் குளம், ஹெலிகாப்டர் இறங்குதளம் (Helipad) மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் எனப் பல அதிநவீன வசதிகளைக் கொண்டது. ஈரான் போர் தொடங்குவதற்கு முன்பு இந்தப் பாதையில் தினமும் 140-க்கும் மேற்பட்ட கப்பல்கள் சென்று வந்தன. ஆனால் இப்போது மிகக் குறைந்த அளவிலான சரக்குக் கப்பல்கள் மட்டுமே செல்கின்றன. இத்தகைய நெருக்கடியான சூழலில், தடை செய்யப்பட்ட ஒரு ரஷ்யக் கோடீஸ்வரரின் கப்பல் தடையின்றிப் பயணித்தது உலக நாடுகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்