"நான் செய்த மிகப்பெரிய பாவம்!" - பாலியல் 'ஜல்சா' குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் - ஓப்பனாக போட்டுடைத்த பில் கேட்ஸ்

தவறாகச் சித்தரிக்கும் முயற்சியாகவே எப்ஸ்டீன் சில மின்னஞ்சல்களை எழுதியிருக்கலாம்...
"நான் செய்த மிகப்பெரிய பாவம்!" -  பாலியல் 'ஜல்சா' குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் - ஓப்பனாக போட்டுடைத்த பில் கேட்ஸ்
Published on
Updated on
2 min read

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் தான் பழகிய நாட்களைக் குறித்து மனம் திறந்து பேசியுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்ஸ்டீனுடன் தான் செலவழித்த ஒவ்வொரு நிமிடத்தையும் ஒரு மிகப்பெரிய தவறாகக் கருதுவதாகவும், அதற்காகத் தான் வருந்துவதாகவும் பில் கேட்ஸ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். பில் கேட்ஸ் மற்றும் ஜெப்ரி எப்ஸ்டீன் ஆகிய இருவருக்கும் இடையிலான நட்பு நீண்ட காலமாகவே பல்வேறு விவாதங்களுக்கு உள்ளாகி வருகிறது. எப்ஸ்டீன் சிறையில் தற்கொலை செய்துகொண்ட பிறகு, அவருடன் தொடர்புடைய நபர்களின் பட்டியல் மற்றும் ஆவணங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட சமீபத்திய ஆவணங்களில் பில் கேட்ஸ் குறித்த சில தகவல்கள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த பில் கேட்ஸ், அந்த ஆவணங்களில் உள்ள தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், தன்னைத் தவறாகச் சித்தரிக்கும் முயற்சியாகவே எப்ஸ்டீன் சில மின்னஞ்சல்களை எழுதியிருக்கலாம் என்றும் கூறினார்.

குறிப்பாக, எப்ஸ்டீனின் தனித் தீவுக்குத் தான் ஒருபோதும் சென்றதில்லை என்றும், அங்கிருந்த பெண்களைத் தான் சந்தித்ததே இல்லை என்றும் பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எப்ஸ்டீன் தனக்குத் தானே சில மின்னஞ்சல்களை அனுப்பியிருப்பதாகவும், அவை ஒருபோதும் தனக்கு வரவில்லை என்றும் விளக்கிய அவர், அந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் மற்றும் நோய்த்தொற்று தொடர்பான செய்திகள் அனைத்தும் கட்டுக்கதைகள் என்று மிகக் கடுமையாகச் சாடினார். எப்ஸ்டீனுடனான தனது உறவு முற்றிலும் சமூகப் பணிகளுக்காக மட்டுமே தொடங்கியது என்று பில் கேட்ஸ் கூறுகிறார். பல பெரும் பணக்காரர்களைத் தமக்குத் தெரியும் என்றும், அவர்களிடமிருந்து உலக சுகாதாரப் பணிகளுக்காக அதிக நிதியைப் பெற்றுத் தர முடியும் என்றும் எப்ஸ்டீன் கூறியதை நம்பியே அவருடன் பழகியதாகக் குறிப்பிட்டார். ஆனால் காலப்போக்கில், அது ஒரு பயனற்ற முயற்சி என்பதைத் தான் உணர்ந்து கொண்டதாகத் தெரிவித்தார். 2011 முதல் 2014 வரையிலான காலக்கட்டத்தில் ஒரு சில முறை மட்டுமே உணவு அருந்துவதற்காக அவரைச் சந்தித்ததாகவும், அந்தச் சந்திப்புகள் தனது வாழ்வின் மிகப்பெரிய முட்டாள்தனம் என்றும் அவர் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

பில் கேட்ஸின் இந்தத் தொடர்பு, அவரது முன்னாள் மனைவி மெலிண்டா பிரெஞ்சு கேட்ஸுடனான விவாகரத்திற்கும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் பழகுவதை மெலிண்டா ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் மெலிண்டா அளித்த பேட்டி ஒன்றில், எப்ஸ்டீனுடன் தொடர்புடைய விவகாரங்கள் மீண்டும் வெளியே வருவது தமக்கு மிகுந்த மனவலியைத் தருவதாகவும், இதற்கான பதில்களை பில் கேட்ஸ் தான் சொல்ல வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவித்த பில் கேட்ஸ், தனது விவாகரத்து ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்றும், அதில் எப்ஸ்டீன் விவகாரமும் ஒரு கசப்பான பகுதியாக இருந்ததை மறைமுகமாக ஒப்புக்கொண்டார். இத்தனை ஆண்டுகள் கழித்து எப்ஸ்டீனுடன் ஏன் பழகினேன் என்று நினைக்கும்போது தமக்கு மிகுந்த ஏமாற்றமாக இருப்பதாகவும், அவர் ஒரு தீய மனிதர் என்பதைத் தான் மிகத் தாமதமாகவே உணர்ந்ததாகவும் பில் கேட்ஸ் மிகுந்த வருத்தத்துடன் அந்த நேர்காணலில் விளக்கமளித்துள்ளார்.

உலகம் போற்றும் ஒரு பெரும் தொழிலதிபர், இத்தகைய குற்றப் பின்னணி கொண்ட ஒருவருடன் தொடர்பு வைத்திருந்தது அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினும், செய்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோருவது ஒரு நேர்மையான அணுகுமுறை என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே சமயம், இவ்வளவு பெரிய ஆளுமை ஒரு குற்றவாளியின் பின்னணியைத் தெரியாமல் பழகியிருக்க வாய்ப்பில்லை என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் வலுவாக எழுந்து வருகின்றன. குறிப்பாக மெலிண்டா எச்சரித்தும் பில் கேட்ஸ் ஏன் தொடர்ந்து அவரோடு தொடர்பில் இருந்தார் என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை. வரும் காலங்களில் வெளிவரவுள்ள மேலும் பல ஆவணங்கள், இந்த விவகாரத்தில் மறைந்திருக்கும் உண்மைகளைத் தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com