“கால் உடைந்ததா? பரவாயில்லை.. ஒரு நாற்காலி தருகிறேன்!”.. வைரலான வாட்ஸ்அப் உரையாடல்

“மருத்துவர் அனுமதி கொடுத்தால் நிச்சயம் வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்
toxic work place
Published on
Updated on
2 min read

இன்றைய வேகமான பணிச்சூழலில், நிறுவனங்கள் பணியாளர்களிடமிருந்து அதிக செயல்திறனை எதிர்பார்ப்பது சாதாரண விஷயமாகிவிட்டது. ஆனால் சில நேரங்களில் அந்த எதிர்பார்ப்பு மனிதநேயத்தின் எல்லையைத் தாண்டும்போது அது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் சமீபத்தில் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு புதிய ஊழியர் சாலை விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதும், அவரை வேலைக்கு வருமாறு தொடர்ந்து வற்புறுத்திய மேலாளரின் வாட்ஸ்அப் உரையாடல் தற்போது உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம், பணியிடங்களில் மனிதநேயம் குறைந்து வருகிறதா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. இந்த உரையாடலை, நச்சுத்தன்மை கொண்ட பணியிட கலாச்சாரங்கள் (Toxic Work Culture) குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடும் பென் அஸ்கின்ஸ் (Ben Askins) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெளியான தகவல்களின்படி, சம்பவத்தில் இடம்பெற்ற ஊழியர் நிறுவனத்தில் சேர்ந்தது வெறும் இரண்டு வாரங்களே ஆகியிருந்தது. அப்போது அவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அந்த நிலையில் மேலாளர் அவரிடம், “நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?” என்று தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு ஊழியர், “எனக்கு கால் உடைந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் இருக்கிறேன்” என்று பதிலளித்துள்ளார். இதற்கு வழக்கமாக யாரும் எதிர்பார்ப்பது போல உடல்நலம் குறித்து விசாரிப்பதற்குப் பதிலாக, மேலாளர் நேரடியாக வேலை பற்றியே பேசத் தொடங்கியுள்ளார். “வெள்ளிக்கிழமை பணிக்கு வர முடியுமா?” என்று அவர் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர், மருத்துவர்கள் சில நாட்கள் முழுமையான ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியிருப்பதாக கூறியுள்ளார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல், “மருத்துவர்கள் எப்போதும் அதிக எச்சரிக்கையாகத்தான் சொல்வார்கள்” என்று மேலாளர் பதிலளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் பிறகும் உரையாடல் முடிவடையவில்லை. “எனக்கு நீங்கள் வெள்ளிக்கிழமை வேலைக்கு வர வேண்டும். வர முடியுமா? வேண்டுமானால் உங்களுக்கு ஒரு நாற்காலி ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று மேலாளர் கூறியுள்ளார். இந்த ஒரு வரிதான் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. கால் முறிவு காரணமாக மருத்துவமனையில் இருக்கும் ஒருவரிடம், “நாற்காலி தருகிறேன், வேலைக்கு வாருங்கள்” என்று கூறியிருப்பது மனிதநேயமற்ற அணுகுமுறையாக பலரால் விமர்சிக்கப்பட்டது.

ஊழியர் மிகவும் அமைதியாகவும் மரியாதையாகவும் பதிலளித்துள்ளார். “மருத்துவர் அனுமதி கொடுத்தால் நிச்சயம் வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். ஆனால் மேலாளர் அதற்குப் பிறகும் நிற்கவில்லை. “நீங்கள் நிறுவனத்தில் சேர்ந்தது இரண்டு வாரங்கள்தான். தற்குள் விடுப்பு கேட்கிறீர்கள்” என்று குற்ற உணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. அதுவே அந்த ஊழியரின் பொறுமையின் எல்லையாக மாறியது. உடனடியாக அவர், “அப்படியானால் உங்களுக்கு இன்னும் எளிதாக்குகிறேன்... நான் வேலையை விட்டு வெளியேறுகிறேன்” என்று பதிலளித்துள்ளார். இந்த பதில் இணையத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.

இந்த உரையாடல் வெளியான பிறகு பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். ஒருவர், “எனது கணுக்கால் உடைந்தபோது கூட அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். கால் வைக்க ஒரு குப்பைத்தொட்டியை வைத்து வேலை செய்ய வைத்தார்கள்” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “எனக்கும் இதேபோல நாற்காலி தருவதாக கூறினார்கள். பின்னர் வேலைக்கு சென்றபோது அந்த நாற்காலியே இல்லை” என்று பகிர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் ஏன் இவ்வளவு பெரிய கவனத்தைப் பெற்றது என்றால், இது ஒரு தனிப்பட்ட நிகழ்வு அல்ல என்று பலர் நம்புகின்றனர். சமீப காலங்களில் உடல்நலக்குறைவு, குடும்ப அவசரநிலை அல்லது மருத்துவ விடுப்பு எடுத்த பணியாளர்களிடம் கூட சில நிறுவனங்கள் கருணையற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதாக பல புகார்கள் வெளியாகி வருகின்றன.

மறுபுறம், நல்ல மேலாளர்களின் உதாரணங்களும் இருக்கின்றன. சமீபத்தில் விபத்தில் காயமடைந்த ஊழியரிடம் “உடனே மருத்துவமனைக்கு செல்லுங்கள், வேலை பற்றி கவலைப்பட வேண்டாம்” என்று கூறிய ஒரு நிறுவனத் தலைவரின் உரையாடலும் வைரலாகி பாராட்டைப் பெற்றது. அதேபோல், குழந்தையை கவனிக்க வேலை நேரத்தில் தளர்வு கேட்ட இந்திய ஊழியருக்கு ஆதரவாக பதிலளித்த அமெரிக்க மேலாளரின் அணுகுமுறையும் சமூக வலைதளங்களில் பாராட்டப்பட்டது.

நவீன நிறுவனங்கள் திறமையான பணியாளர்களை ஈர்க்க பல திட்டங்களை அறிவிக்கின்றன. ஆனால் சம்பளம், சலுகைகள், பதவி உயர்வு ஆகியவற்றை விட முக்கியமானது பணியாளர்களின் உடல்நலம் மற்றும் மனிதநேயத்தை மதிக்கும் பணிச்சூழல் என்பதையே இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது. ஒரு ஊழியர் மாற்றப்படலாம்; ஆனால் நம்பிக்கை இழந்த பணிச்சூழலை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம். “கால் உடைந்திருக்கிறது” என்று சொன்ன ஒருவரிடம் “நாற்காலி தருகிறேன், வேலைக்கு வாருங்கள்” என்று கூறிய மேலாளரின் ஒரு வரி, இன்று உலகம் முழுவதும் நச்சுத்தன்மை கொண்ட பணியிட கலாச்சாரத்தின் உதாரணமாக பேசப்படுகிறது. அதே நேரத்தில், “நான் வேலையை விட்டு வெளியேறுகிறேன்” என்ற அந்த ஊழியரின் பதில், சுயமரியாதைக்கும் மனிதநேயத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டும் நிகழ்வாக மாறியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com