கனடா மருத்துவமனையின் அலட்சியம்: 8 மணிநேரக் காத்திருப்பில் இந்திய வம்சாவளி நபர் மரணம்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி கருத்து!

தனது தந்தையிடம் பிரசாந்த் கதறியும், மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு ஒரு பாராசிட்டமால் மாத்திரையை...
கனடா மருத்துவமனையின் அலட்சியம்: 8 மணிநேரக் காத்திருப்பில் இந்திய வம்சாவளி நபர் மரணம்! எலான் மஸ்க் வெளியிட்ட அதிரடி கருத்து!
Published on
Updated on
2 min read

கனடாவின் எட்மண்டன் நகரில் உள்ள கிரே நன்ஸ் (Grey Nuns) சமூக மருத்துவமனையில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமார் என்ற இந்திய வம்சாவளி நபர், கடுமையான நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்றும், சுமார் எட்டு மணி நேரம் சிகிச்சையின்றி காத்திருக்க வைக்கப்பட்டதால் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கனடாவின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் தோல்வியாகப் பார்க்கப்படும் நிலையில், உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலான் மஸ்க் இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் காட்டமான கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

பிரசாந்த் ஸ்ரீகுமார் கடந்த டிசம்பர் 22 அன்று தனது பணியிடத்தில் இருந்தபோது கடுமையான நெஞ்சுவலி மற்றும் மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்டமாக ஈசிஜி (ECG) சோதனை செய்யப்பட்டபோது, ஆபத்தான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறி அவரை அவசர சிகிச்சை அறையின் காத்திருப்புப் பகுதியில் அமர வைத்தனர். "அப்பா, என்னால் இந்த வலியத் தாங்க முடியவில்லை" என்று தனது தந்தையிடம் பிரசாந்த் கதறியும், மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு ஒரு பாராசிட்டமால் மாத்திரையை (Tylenol) மட்டுமே வழங்கியதாகக் கூறப்படுகிறது. பிரசாந்தின் இரத்த அழுத்தம் 210 வரை உயர்ந்த நிலையிலும், மருத்துவர்கள் அவரைப் பரிசோதிக்க முன்வரவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

சுமார் எட்டு மணிநேரக் காத்திருப்பிற்குப் பிறகு, பிரசாந்த் சிகிச்சைப் பகுதிக்குள் அழைக்கப்பட்ட பத்து வினாடிகளிலேயே மயங்கி விழுந்தார். ஊழியர்கள் அவரை உயிர்ப்பிக்க முயன்றபோதிலும், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரசாந்தின் மனைவி நிஹாரிகா ஸ்ரீகுமார், தனது கணவரின் உடலுக்கு அருகில் நின்று வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "என் கணவருக்கு மாரடைப்பு ஏற்படும் என்று ஊழியர்கள் சந்தேகிக்கவே இல்லை. நெஞ்சுவலியை அவர்கள் ஒரு தீவிரமான பிரச்சனையாகக் கருதவில்லை. முறையான சிகிச்சை தராமல் மருத்துவமனை ஊழியர்கள் என் கணவரைக் கொன்றுவிட்டனர்" என்று கதறி அழுதபடி தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

இந்தத் துயரச் சம்பவத்தின் வீடியோவைப் பார்த்த எலான் மஸ்க், "இது போன்ற சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன. கனடாவின் அரசு நடத்தும் சுகாதாரக் கட்டமைப்பு தீவிரமான நெருக்கடியில் இருப்பதை இது காட்டுகிறது" எனும் ரீதியில் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்த விவகாரத்தில் கனடா அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பிரசாந்தின் மரணம் குறித்து அந்த மருத்துவமனை நிர்வாகம் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது. பிரசாந்த் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைத் தவிக்க விட்டுச் சென்றிருக்கும் நிலையில், கனடாவின் மருத்துவக் கட்டமைப்பு மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com