நியூசிலாந்தில் செட்டில் ஆக சூப்பர் சான்ஸ்! ஒரே வருடத்தில் குவிந்த 2.4 பில்லியன் டாலர்! இந்தியர்களுக்கும் வாய்ப்பு.. அந்த 'கோல்டன் விசா' ரகசியம் என்ன?

அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம்
New Zealand golden visa
Published on
Updated on
2 min read

நியூசிலாந்து அரசின் "கோல்டன் விசா" (Golden Visa) திட்டம் உலகெங்கிலும் உள்ள பெரும் பணக்காரர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட முதல் ஒரு வருடத்திலேயே சுமார் 4 பில்லியன் நியூசிலாந்து டாலர்கள் அளவிலான முதலீடுகள் குவிந்துள்ளதாக அரசுத் தரப்பு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கவும் கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம், தற்போது வெலிங்டன் அரசுக்கு ஒரு மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் குடியேற்றத் துறை அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் கூறுகையில், ஏற்கனவே 1.49 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 2.4 பில்லியன் டாலர் மதிப்பிலான விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆக்டிவ் இன்வெஸ்டர் பிளஸ் (AIP) என்று அழைக்கப்படும் இந்த விசா திட்டம், வெளிநாட்டுப் பணக்காரர்கள் நியூசிலாந்தின் உள்நாட்டு நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்வதன் மூலம் அங்கு நிரந்தரமாகக் குடியேற வழிவகை செய்கிறது. கடந்த 2025 ஏப்ரல் மாதம் இந்தத் திட்டத்தில் கொண்டு வரப்பட்ட அதிரடி மாற்றங்கள், உலக முதலீட்டாளர்களை நியூசிலாந்து பக்கம் திரும்ப வைத்துள்ளது. குறிப்பாக, முந்தைய விதிகளில் இருந்த ஆங்கில மொழித் தகுதித் தேர்வு நீக்கப்பட்டது மற்றும் முதலீட்டாளர்கள் நியூசிலாந்தில் தங்கியிருக்க வேண்டிய கால அளவு குறைக்கப்பட்டது போன்ற சலுகைகள் இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன.

இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டு வகையான முதலீட்டு முறைகள் உள்ளன. அதிக ரிஸ்க் கொண்ட Growth பிரிவில் முதலீடு செய்ய விரும்புவோர் 5 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை மூன்று ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். சற்று பாதுகாப்பான Balanced பிரிவைத் தேர்ந்தெடுப்போர் 10 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். இந்த விசா பெறுபவர்கள் தங்களது வாழ்க்கைத் துணை மற்றும் 24 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசிக்கவும், வேலை செய்யவும் மற்றும் படிக்கவும் முழு உரிமை வழங்கப்படுகிறது.

அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த விசா பெற அமெரிக்கா மற்றும் சீனாவில் இருந்துதான் அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஹாங்காங், ஜெர்மனி மற்றும் தைவான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை இரண்டு விண்ணப்பங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. நியூசிலாந்தின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்ட இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய ஊந்துதலாக இருப்பதாக அமைச்சர் ஸ்டான்போர்ட் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். குறிப்பாக விண்வெளி மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறையில் உள்ள நிறுவனங்கள் இந்த முதலீடுகள் மூலம் அதிகப் பயனடைந்துள்ளன.

உலக அளவில் போர்ச்சுகல், கிரீஸ், ஸ்பெயின் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் இது போன்ற கோல்டன் விசா திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும், சில நாடுகள் தற்போது இந்தக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கி வருகின்றன. சொத்துக்களின் விலை உயர்வதற்குக் கோல்டன் விசாக்கள் காரணமாக இருப்பதாகக் கூறி சில ஐரோப்பிய நாடுகள் இந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளன. ஆனால், நியூசிலாந்து அரசு தனது விதிகளில் பல மாற்றங்களைச் செய்து, முதலீட்டாளர்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வருகிறது. வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கனவு காணும் கோடீஸ்வரர்களுக்கு நியூசிலாந்தின் இந்த AIP விசா ஒரு பொன்னான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com