

காலம் காலமாகச் சுமை மட்டுமே சுமந்து, பலரின் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிய நாலுகால் கழுதைகள், ஒரு சர்வதேசப் பொருளாதார முதலீடாக மாறியுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதனின் சுமையை மட்டுமே சுமந்த ஒரு சாதுவான பிராணி, மனிதனின் அழகுப் பேராசைக்கும், சர்வதேசப் பணப்பசிக்கும் பலியாகி, பெரும் முதலீட்டுக்கு வழிவகுத்துள்ளது.
சரி, இந்தக் கழுதைகளுக்கு வந்த திடீர் மவுசுதான் என்ன?
மனிதனின் பிடிவாதத்திற்கும், உவமையாக்கி மட்டம் தட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்ட கழுதைகள் (மன்னிக்கவும், கழுதையார்கள்), ஒரு நாட்டின் பெரும் பொருளாதாரச் சந்தை இனமாக மாறியுள்ளன.
அந்த நாடு ஏதோ ஒரு கண்டத்தில் இல்லை. நாம் தேசத்தை ஒட்டி பிணைந்திருக்கும் பாகிஸ்தானில்தான் இந்தக் கழுதைச் சந்தை களைகட்டியுள்ளது.
சீனாவில் கழுதையின் தோலில் இருந்து எடுக்கப்படும் ஒருவித கூழ்மானமான ‘எஜியாவோ’ (Ejiao) எனப்படும் ஜெலட்டினைக் கொண்டு ஆன்டி-ஏஜிங் கிரீம்கள், ரத்த விருத்தி மருந்துகள், ஃபேஷியல் சீரம், லோஷன்கள், ஃபேஸ் மாஸ்க்குகள், கொலாஜன் நிறைந்த குளியல் சோப்புகள், நோய் எதிர்ப்புச் சக்தி டானிக்குகள் என ஏகப்பட்ட விலை உயர்ந்த பொருட்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது சீனாவில் இவற்றைத் தயாரிக்க சுமார் 4 முதல் 6 மில்லியன் கழுதைத் தோல்கள் தேவைப்படும் நிலையில், உள்ளூர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க பாகிஸ்தான் கழுதைகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்துள்ளது. (கழுதைகளுக்கு வந்த நல்ல நேரம்!)
ஆசியாவிலேயே சுமார் 6.2 மில்லியன் கழுதைகளுடன் முன்னணியில் இருக்கும் பாகிஸ்தானிடம் இருந்து இறைச்சி மற்றும் தோலை இறக்குமதி செய்ய சீனா கைகோர்த்துள்ளது. இரு நாடுகளும் 2024-ல் கழுதைத் தோல்கள் மற்றும் இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான நெறிமுறைகளை இறுதி செய்தன.
இதனையடுத்து, பாகிஸ்தானில் வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கழுதையின் விலை 2 லட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில், இதனை அந்நாடு பெரும் பொருளாதார வாய்ப்பாக மாற்றியுள்ளது.
பாகிஸ்தானில் அமைந்துள்ள பலூசிஸ்தானின் துறைமுக நகரமான குவாதரில், சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பிரத்யேக கழுதைப் பண்ணைகள் மற்றும் பதப்படுத்தும் மையங்களும் உருவாகி வருகின்றன. இந்தப் பண்ணைகளை உருவாக்க சீனா செய்துள்ள முதலீடு சுமார் 415 கோடி ரூபாய் வரை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தான் பொருளாதார ஆய்வறிக்கை 2025-26-ன் படி, பாகிஸ்தானின் கழுதைகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டு 6 மில்லியனாக இருந்த நிலையில், 2025-26-ல் 6.2 மில்லியனாக தொடர்ந்து அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2,00,000 முதல் 2,16,000 கழுதைகளின் தோல்கள் மற்றும் இறைச்சியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய இரு நாடுகளின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சுங்கத் துறைகளுக்கிடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தகவல்களின் படி, சுமார் 1.6 கோடி ரூபாய் மதிப்பிலான தோல் மற்றும் இறைச்சி சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத்தொழில் முழுவீச்சில் செயல்படும்போது, பாகிஸ்தானின் கால்நடைத் துறைக்கு ஆண்டுதோறும் சுமார் 30 மில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது 250 கோடி இந்திய ரூபாய் வரை ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சட்டவிரோதக் கடத்தல் மற்றும் திருட்டு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த ஆப்பிரிக்க ஒன்றியம் 2024-ல் கழுதைகள் கண்டம் தழுவிய ஏற்றுமதித் தடையை விதித்தது. இதனால் உலகச் சந்தையில் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியைப் பாகிஸ்தான் தனக்கான பொருளாதார வாய்ப்பாக மாற்றிக்கொண்டுள்ளது.
பாகிஸ்தான் அரசு தனது மக்களுக்கு இதனை வேலைவாய்ப்பாகவும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் ஒரு திட்டமிட்ட தொழிலாகவும் ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மனிதர்களின் சுமைகளைச் சுமந்த ஒரு பரிதாபத்திற்குரிய பிராணி, இன்று சர்வதேச வர்த்தகத்தையும் தீர்மானிக்கும் நான்கு கால் பொருளாதாரமாக நிமிர்ந்து நிற்கிறது.
“யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்ற பழமொழி காலச்சக்கரத்தில் மாறி, ஒரு லிட்டர் பால் ஏழாயிரம் ரூபாய், கிலோ சீஸ் எண்பதாயிரம் ரூபாய், மார்க்கெட்டில் ஒரு கழுதையின் தலை விலை இரண்டு லட்சம் ரூபாய் என ஏகத்துக்கு விலை எகிறிப்போயுள்ளது.
“ஏண்டா, என்னை இப்படித் திட்டினீங்க?” என்று கழுதைகள் கேட்கும் அளவுக்கு சர்வதேசச் சந்தையில் அவை விஐபியாக உருவெடுத்துள்ளன.
இனிமேல் யாரும் யாரையும் பார்த்து “கழுத... கழுத...” என்று திட்டினால், அவர்கள் குஷியாகிவிடலாம். ஏனென்றால், அதன் அர்த்தம்...
“என் சர்வதேச ஏற்றுமதிச் சொத்தே, என் பல லட்ச ரூபாய் முதலீடே!” என்பதுதான்…
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.