விடைபெற்றார் 'டோரேமோன்' நாயகர்.. புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் இயக்குநர் புற்றுநோயால் காலமானார்!

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு தனிப்பட்ட இறுதிச் சடங்கிற்குப் பிறகு, சில நாட்கள் கழித்துதான் இந்த செய்தி பொதுமக்களுக்கு..
விடைபெற்றார் 'டோரேமோன்' நாயகர்.. புகழ்பெற்ற கார்ட்டூன் தொடர் இயக்குநர் புற்றுநோயால் காலமானார்!
Published on
Updated on
2 min read

'டோரேமோன்' படைப்பிற்காகப் பெரிதும் அறியப்பட்ட, ஜப்பானிய 'அனிமே' இயக்குநரான சுடோமு ஷிபயாமா, நுரையீரல் புற்றுநோயால் தனது 84வது வயதில் காலமானார். அவர், ஜப்பான் மற்றும் அதையும் தாண்டி தொலைக்காட்சி மற்றும் திரைப்பட அனிமேஷனை வடிவமைத்த பெருமையை வரலாற்றில் விட்டுச் சென்றுள்ளார்.

குழந்தைகளிடம் மட்டுமின்றி இளைஞர்களிடமும் பெரிதும் வரவேற்பை பெற்று, நீண்டகாலம் ஒளிபரப்பட்ட 'டோரேமோன்' படைப்பிற்காக பெரிதும் அறியப்பட்டவர்தான் சுடோமு ஷிபயாமா. இவர் நுரையீரல் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் தனது 84வது வயதில் காலமானார் என்று 'அஜியா-டோ அனிமேஷன் வொர்க்ஸ்' என்ற அனிமேஷன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. அவரது மரணம் மார்ச் 6 அன்று நிகழ்ந்ததாகவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்ட ஒரு தனிப்பட்ட இறுதிச் சடங்கிற்குப் பிறகு, சில நாட்கள் கழித்துதான் இந்த செய்தி பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

சுடோமு ஷிபயாமா பற்றி...:

1941-ல் டோக்கியோவில் பிறந்த ஷிபயாமா, 1960-களின் முற்பகுதியில் அனிமேஷன் துறையில் நுழைந்தார். அதன்பின்பு அனிமேஷன் உலகில் தவிர்க்க முடியாத ஒருவராக மாறினார். ஜப்பானில் அனிமேஷன் துறையின் முக்கிய ஆளுமையாக அவர் பரவலாகக் கருதப்பட்டார். மேலும், 1979ம் ஆண்டு 'டோரேமோன்' தொலைக்காட்சித் தொடரில், அந்நாட்டின் மிகவும் நிலைத்திருக்கும் கதாபாத்திரங்களில் ஒன்றை வடிவமைப்பதில் அவர் ஒரு முக்கியப் பங்காற்றினார். அதைத் தொடர்ந்து, 1980களின் முற்பகுதியிலிருந்து 2004 வரை, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, அந்தத் தொடரை அடிப்படையாகக் கொண்ட 22 திரைப்படங்களை அவர் இயக்கினார். 'டோரேமோன்' தொலைக்காட்சித் தொடரின் தலைமை இயக்குநராகவும் அவர் இருந்தார். அத்தொடரின் தொனியையும் கதைசொல்லும் பாணியையும் வரையறுத்த அவரின் அளப்பரிய பங்கு அந்த தொடரினை உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற வழிவகுத்தது. தனது பணிக்காக, ​​ஷிபயாமா 2018-ஆம் ஆண்டு டோக்கியோ அனிமே விருது விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' உட்பட ஏராளமான கௌரவங்களைப் பெற்றுள்ளார்.

பிற பணிகள்:

'டோரேமோன்' மட்டுமின்றி இவர், சிபி மருகோ-சான் (1990-1992), நிண்டாமா ரந்தாரோ (1993-2012) மற்றும் மஜிம் நி ஃபூமாஜிம் கைகெட்சு ஜோரோரி (2006-2007) உள்ளிட்ட பல பிரபலமான தொடர்களை ஷிபாயாமா இயக்கியுள்ளார். அவர் ரன்மா 1/2-இன் அசல் பதிப்பிலும் பணியாற்றி, பல முக்கிய 'கேம்' தொடர்களில் தனது பெயரை பதியவைத்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை :

அனிமேஷன் துறைக்குள் நுழைவதற்கு முன்பு ஒரு 'மங்கா' கலைஞராகத் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 1963-ல் டோய் அனிமேஷனில் இன்-பிட்வீனராகச் சேர்ந்தார், பின்னர் 1966-ல் அப்போதைய ஏ-புரொடக்‌ஷன் என்று அழைக்கப்பட்ட ஷின்-ஈ அனிமேஷனுக்கு மாறினார். தனது ஆரம்ப ஆண்டுகளில், அவர் 'தி கட்ஸி ஃப்ராக்' மற்றும் 'டென்சாய் பகாபோன்' உள்ளிட்ட படைப்புகளில் பணியாற்றினார். 1978-ல், அவர் ஷின்-ஈ அனிமேஷன் நிறுவனத்திலிருந்து விலகி, ஒசாமு கோபயாஷி மற்றும் மிச்சிஷிரோ யமடா ஆகியோருடன் இணைந்து அஜியா-டோ அனிமேஷன் வொர்க்ஸ் நிறுவனத்தை நிறுவினார்; பின்னர் அதன் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் பணியாற்றினார். இவர், 1984 முதல் 2005 வரை தொலைக்காட்சி அனிமேயின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார், மேலும் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக 'டோரேமோன்' தொடரை அடிப்படையாகக் கொண்டு 22 திரைப்படங்களை இயக்கினார். அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகளில், 'டோரேமான்: நோபிடா அண்ட் தி கேஸில் ஆஃப் தி அண்டர்சீ டெவில்' மற்றும் 'டோரேமான்: நோபிடா இன் தி வான்-நியான் ஸ்பேஸ்டைம் ஒடிஸி' ஆகியவையும், 'நோபிடாவின் கிரேட் அட்வென்ச்சர் இன்டு தி அண்டர்வேர்ல்ட்' மற்றும் 'நோபிடாவின் லிட்டில் ஸ்டார் வார்ஸ்' போன்ற திரைப்படங்களும் அடங்கும்.

இவரது மறைவிற்கு பலரும் தங்களது இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். மேலும், தங்களது குழந்தைப் பருவத்தை மேலும் அழகாக்கியதற்கு நன்றி, RIP Tsutomu Shibayama என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com