ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்கள் விட்டுச் சென்ற பொருட்களும் எழுத்துக்களும்தான் நமக்குப் பெரிய ஆதாரம். அப்படியொரு ஆச்சரியமான கண்டுபிடிப்புதான் தற்போது எகிப்தில் நிகழ்ந்துள்ளது. சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான மம்மி ஒன்றின் உடல் பகுதியில், உலகப் புகழ்பெற்ற கிரேக்கக் காவியமான ஹோமரின் 'இலியட்' நூலின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொல்லியல் ஆய்வாளர்களிடையே மட்டுமல்லாமல் வரலாற்று ஆர்வலர்களிடையேயும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
எகிப்தின் அல் பஹ்னாசா பகுதியில், பழங்காலத்தில் ஆக்சிரின்கஸ் என்று அழைக்கப்பட்ட நகரத்தில் இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது. பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வுக் குழுவினர், 2025ஆம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அங்குள்ள 65வது கல்லறையில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான ரோமானிய காலத்தைச் சேர்ந்த மம்மி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மம்மியின் வயிற்றுப் பகுதியில், உடலைப் பாதுகாக்கும் சடங்கின் ஒரு பகுதியாக பாப்பிரஸ் எனப்படும் பழங்கால எழுதும் தாள் வைக்கப்பட்டிருந்தது. முதலில் சாதாரணமான பழங்கால ஆவணமாகத் தோன்றிய அந்தத் தாளை ஆய்வு செய்தபோதுதான் அதில் இருந்த தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
அந்தப் பாப்பிரஸ் தாளில் இருந்த எழுத்துகள் ஹோமர் எழுதிய 'இலியட்' காவியத்தின் இரண்டாவது பாகத்தைச் சேர்ந்தவை என்பது ஆய்வில் தெரியவந்தது. குறிப்பாக, டிராய் போருக்குச் சென்ற கிரேக்கப் படைகளின் கப்பல்கள் மற்றும் அவற்றின் தலைவர்கள் பற்றிய பட்டியல் அதில் இடம்பெற்றுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு உருவான இந்தக் காவியம், கிரேக்கர்களுக்கும் டிராய் நகரத்தினருக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் புகழ்பெற்ற போரை மையமாகக் கொண்டது. வீரர்கள், மன்னர்கள், கடவுள்கள், போர் மற்றும் மனித உணர்வுகள் எனப் பல அம்சங்களை உள்ளடக்கிய இந்தப் படைப்பு உலக இலக்கிய வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தப் பாப்பிரஸ் தாள் கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதன் உண்மையான தகவல்களை அறிய வல்லுநர்கள் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டனர். 2026ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடந்த ஆய்வில், பாப்பிரஸ் பாதுகாப்பு நிபுணர்கள், பழங்கால ஆவண ஆய்வாளர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்கள் இணைந்து அதன் எழுத்துகளைப் படித்தனர். அதன் மூலமாகவே அது ஹோமரின் இலியட் காவியத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
ஒரு கிரேக்க இலக்கியப் படைப்பை எதற்காக எகிப்திய மம்மியின் உடலில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான். பொதுவாக அந்தக் காலத்தில் மம்மிகளுடன் மந்திரங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் இறுதிச் சடங்குகள் தொடர்பான வாசகங்கள் எழுதப்பட்ட பாப்பிரஸ் தாள்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இலக்கியக் காவியத்தின் ஒரு பகுதி இவ்வாறு வைக்கப்பட்டிருப்பது மிகவும் அரிதான கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இதற்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அது இறந்தவரைப் பாதுகாக்கும் நம்பிக்கையுடன் வைக்கப்பட்டதா அல்லது அந்த நபருக்கு கிரேக்க இலக்கியத்தின் மீது இருந்த ஆர்வத்தைக் காட்டுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்தக் கண்டுபிடிப்பு ஒரு பழங்காலக் காகிதத்தைக் கண்டுபிடித்ததோடு முடிந்துவிடவில்லை. எகிப்து, கிரேக்கம் மற்றும் ரோமானியப் பண்பாடுகள் ஒன்றோடொன்று எவ்வாறு தொடர்பு கொண்டிருந்தன என்பதையும் புரிந்துகொள்ள உதவுகிறது. ஆயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரின் இறுதிப் பயணத்திலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கிரேக்கக் காவியத்தின் வரிகள் இடம்பெற்றிருந்தன என்பது உண்மையிலேயே வியப்பான விஷயம். மண்ணுக்குள் புதைந்திருந்த அந்தச் சிறிய பாப்பிரஸ் துண்டு, வரலாற்றின் மறைக்கப்பட்ட பல பக்கங்களை மீண்டும் திறந்திருக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.