ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாகவும், நாட்டின் எரிசக்தி விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள "உடனடி ஆபத்து" என அவர் குறிப்பிட்டதன் காரணமாகவும், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவித்துள்ளார். தொடக்கத்தில் ஓராண்டுக்கு நீடிக்கும் இந்த அவசரநிலை, போர் காரணமாக எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்சாரச் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க, பிலிப்பைன்ஸ் தனது நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களின் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்திச் செயலாளர் தெரிவித்த சில மணிநேரங்களிலேயே இந்த 'அவசர நிலை' அறிவிக்கப்பட்டது.
ஏனெனில் 116 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்தத் தீவுக்கூட்ட நாடு, தனது மின்சார உற்பத்தியில் சுமார் 60% நிலக்கரியைச் சார்ந்துள்ளது. மேலும், எரிபொருள் விலை உயர்வுக்கு மார்கோஸ் நிர்வாகம் உடனடியாகப் பதிலளிக்கத் தவறியதாகக் கூறி, பிலிப்பைன்ஸ் போக்குவரத்துத் தொழிலாளர்கள், பயணிகள் மற்றும் நுகர்வோர் குழுக்கள் வியாழக்கிழமை முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டிருந்த நிலையில், கடந்த 24ம் தேதி இந்த அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி, எரிபொருட்களை பதுக்குதல் அல்லது அதைவைத்து இலாபமீட்டுதல் போன்றவற்றிற்கு எதிராக நேரடி நடவடிக்கை எடுக்கவும், எரிபொருள் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக முன்கூட்டியே பணம் செலுத்தவும் எரிசக்தித் துறைக்கு இந்த உத்தரவு அதிகாரம் அளித்துள்ளது.
அவசரகால நடவடிக்கையின் ஒரு பகுதியாக, எரிபொருள், உணவு, மருந்து, விவசாயப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் சீரான போக்குவரத்து, விநியோகம், பகிர்வு மற்றும் அவை கிடைப்பதை உறுதி செய்வதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மார்கோஸ் ஜூனியர் அறிவித்திருக்கிறார். மேலும், புதன்கிழமை பிற்பகுதியில், பிலிப்பைன்ஸ் தனது எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து, அதாவது, ஈரான் மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து எண்ணெயைப் பெறுவதற்கு, பிலிப்பைன்ஸ் அமெரிக்க வெளியுறவுத் துறையிடம் விலக்குகளைக் கோரி வருவதாகத் தெரியவந்தது என, அமெரிக்காவிற்கான அந்நாட்டின் தூதர் ஜோஸ் மானுவல் ரொமுவால்டெஸ் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
"வாஷிங்டன் பதிலளித்துள்ளதா?" என்று கேட்கப்பட்டதற்கு, இந்த விவகாரம் "தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்று ரொமுவால்டெஸ் கூறியிருக்கிறார். மிக அதிக எரிசக்தி செலவுகளைக் கொண்ட நாடுகளில் ஒன்றான பிலிப்பைன்ஸ், தனது மின் உற்பத்தி நிலையங்களை இயக்குவதற்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருளைப் பெருமளவில் சார்ந்துள்ளது. நாட்டில் சுமார் 45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், தனது கையிருப்பை வலுப்படுத்த மேலும் 1 மில்லியன் பீப்பாய் எண்ணெயைக் கொள்முதல் செய்ய முயன்று வருவதாகவும் அரசாங்கம் கூறியிருக்கிறது.
ஆனால், போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள், பிலிப்பைன்ஸ் செனட்டர்களும், எண்ணெய் விலை உயர்வினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு மார்கோஸ் நிர்வாகம் ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கையை எடுக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி, கடுமையாக விமர்சித்துள்ளனர்.
அரசின் நடவடிக்கைகள்:
இதற்கிடையில், மத்திய கிழக்கில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டினரை மீட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்குமாறு புலம்பெயர் தொழிலாளர்கள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. சுமார் 24 லட்சம் பிலிப்பைன்ஸ் நாட்டினர் மத்திய கிழக்கில் வசித்து வேலை செய்கின்றனர், மேலும், இவர்களில் சுமார் 31,000 பேர் இஸ்ரேலிலும், 800 பேர் ஈரானிலும் பணியாற்றிவருகின்றர்கள். அதிகரித்து வரும் எரிபொருள் விலைகளைச் சமாளிக்க உதவும் வகையில், நாடு முழுவதும் உள்ள ஏராளமான மோட்டார் சைக்கிள் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் பிற பொதுப் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு தலா 5,000 பெசோக்களை அதாவது 83 டாலர், அரசாங்கம் வழங்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பிட்ட சில நகரங்களில் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த உத்தரவு, பொதுப் போக்குவரத்து எரிபொருள் மானியங்களை நெறிப்படுத்தவும், சுங்கக் கட்டணங்கள் மற்றும் விமானக் கட்டணங்களைக் குறைக்கவும் அல்லது நிறுத்திவைக்கவும் போக்குவரத்துத் துறைக்கு அதிகாரம் அளிக்கிறது. அதேவேளையில், “நெருக்கடிச் சூழ்நிலைகளில்” உள்ள தனிநபர்களுக்கு உதவியை விரைவுபடுத்தவும் இது வழிவகுக்கிறது என்று கூறியிருக்கின்றனர். இதன் மூலம், பிலிப்பைன்ஸில் ஓரளவிற்கு எரிபொருள் தட்டுப்பாட்டினை கட்டுக்குள்கொண்டுவரலாம் என்று பிலிப்பைன்ஸ் அரசால் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.