

விடுமுறையைக் கொண்டாடச் சென்ற ஓர் அமெரிக்கத் தலைமை ஆசிரியர் ஒருவரும், அவரது பதினைந்து வயது மகனும் நூறு முறைக்கும் மேல் ராட்சதக் குளவிகளால் கொட்டப்பட்டு உயிரிழந்த சோகச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள பெரிய வகை விஷக் குளவிகள் இவை. இவற்றின் விஷம் மிகக் கடுமையான வலியையும் சில சமயம் மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது.
வியட்நாமில் வசித்துவந்த டேனியல் ஓவன் (47), அவரது மகன் கூப்பர் ஆகிய இருவரும் அக்டோபர் 15ஆம் நாள் லாவோஸ் நாட்டில் உள்ள ஓர் இயற்கை சாகச விடுதியில் மரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் சறுக்கும் சாகசத்தில் ஈடுபட்டிருந்தனர். வழிகாட்டியுடன் அவர்கள் மரத்திலிருந்து கீழே இறங்க முயற்சிக்கும்போது, ஒன்றிரண்டு அங்குல நீளமும் கொண்ட ராட்சதக் குளவிகள் கூட்டமாக வந்து அவர்கள் மீது பாய்ந்து கொட்டின. நூற்றுக்கும் அதிகமான கொட்டுகள் விழுந்ததால், அவர்கள் உடல் முழுவதும் சிவப்புக் கொப்புளங்களால் நிரம்பிப்போனது.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, சுய நினைவுடனேதான் இருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சில மணி நேரங்களுக்குள்ளேயே இருவரும் உயிரிழந்தனர். இவர்களுக்குச் சிகிச்சையளித்த மருத்துவர், தனது இருபது ஆண்டு பணிக்காலத்தில் இதுபோன்ற கொடூரமான சம்பவத்தை நான் கண்டதில்லை எனக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து அந்தச் சாகச விடுதி நிர்வாகம், இது "எதிர்பாராமல் நடந்த இயற்கைப் பேரழிவு" என்று கூறி ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.