

1952-ம் ஆண்டு முதல் மிஸ் யுனிவர்ஸ் உலக அழகிப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்று வந்த பிரான்ஸ் நாடு, 73 ஆண்டுகால வரலாற்றை முறித்துக் கொண்டு 2026-ம் ஆண்டுக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிஸ் பிரான்ஸ் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்தச் செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த 2025-ம் ஆண்டு போட்டியில் நிலவிய பல்வேறு குளறுபடிகள் மற்றும் நிர்வாகச் சிக்கல்களே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மிஸ் பிரான்ஸ் போட்டியின் அடையாளமும், விழுமியங்களும் தற்போது சர்வதேச மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் செயல்பாடுகளுடன் ஒத்துப்போகவில்லை என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஃப்ரெடெரிக் கில்பர்ட் தெரிவித்துள்ளார். பிரான்சின் கலாச்சாரம் மற்றும் பொறுப்புகளை முன்னிறுத்தி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், வருங்காலத்தில் மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பதாகவும், சூழல் சரியாக அமையும் பட்சத்தில் மீண்டும் போட்டியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் இந்த அதிரடி முடிவுக்கு இணையத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கலந்து எழுந்துள்ளன. பலரும் இது துணிச்சலான முடிவு என்று பாராட்டி வரும் வேளையில், மற்ற நாட்டுப் பிரதிநிதிகளும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். மிஸ் யுனிவர்ஸ் அமைப்பின் மதிப்பீடுகள் பிரான்சின் எதிர்பார்ப்புகளுடன் மீண்டும் இணையும் நாளில், அந்நாடு மீண்டும் போட்டியில் சேரலாம் என்று சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பிரான்ஸ் விலகியதை உறுதி செய்த மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு, 2026-ம் ஆண்டு முதல் பிரான்ஸ் நாட்டிற்கான போட்டியை தாங்களே நேரடியாக மேற்பார்வையிடப் போவதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் மிஸ் யுனிவர்ஸ் பிராண்டின் தரம் மற்றும் தொழில்முறை அணுகுமுறையை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது. 2025-ம் ஆண்டுப் போட்டியில் நிலவிய சர்ச்சைகளுக்குப் பிறகு, இந்த புதிய மாற்றம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.