

விண்வெளிப் பயணம் என்றாலே ராக்கெட் ஏவுதல், அறிவியல் சோதனைகள், விண்வெளி வீரர்களின் கடுமையான பயிற்சிகள் ஆகியவைதான் நினைவுக்கு வரும். ஆனால், விண்வெளியில் இருக்கும் வீரர்களின் உணவுப் பழக்கத்திற்கும் நாடுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதற்கு உதாரணமாக, சீனாவின் தியாங்காங் (Tiangong) விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள பாகிஸ்தான் விண்வெளி வீரர் முகமது ஜீஷான் அலிக்காகத் தனிப்பட்ட உணவுப் பட்டியலை சீனா தயாரித்துள்ளது. இதில் பட்டர் சிக்கன், மாட்டிறைச்சி நிஹாரி, ஆட்டிறைச்சி கோர்மா, கொண்டைக்கடலைக் கறி உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சிறப்பு ஏற்பாடு தற்போது சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஜீஷான் அலி, சீனாவின் ஷென்ஷோ-24 (Shenzhou-24) விண்கலம் மூலம் நவம்பர் 25ஆம் தேதி விண்வெளிக்குப் புறப்பட்டார். அவருடன் சீன விண்வெளி வீரர்களான டாங் ஹாங்போ மற்றும் வூ யி ஆகியோரும் பயணம் செய்தனர். இந்த விண்கலம் வெற்றிகரமாகத் தியாங்காங் விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது. இதன் மூலம் சீனாவின் விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் வெளிநாட்டு விண்வெளி வீரர் என்ற பெருமையை ஜீஷான் அலி பெற்றுள்ளார். ஏற்கெனவே அங்கு தங்கியிருந்த மூன்று சீன விண்வெளி வீரர்களுடன் புதிய குழுவினர் இணைந்ததால், விண்வெளி நிலையத்தில் இருந்த வீரர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
இந்தப் பயணத்தில் ஜீஷான் அலியின் உணவுத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அவரது மதம் சார்ந்த உணவுக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு, ஹலால் முறைக்கு ஏற்ற உணவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சீன விண்வெளி வீரர்கள் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் இதற்கான உணவுத் தேர்வுகளை மேற்கொண்டுள்ளது. தெற்காசிய உணவுக் கலாசாரத்தையும், பாகிஸ்தானியர்களின் உணவுப் பழக்கங்களையும் கருத்தில் கொண்டு 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் கொண்ட சிறப்புப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஏழு பாகிஸ்தானிய பாணியிலான விண்வெளி உணவுகள் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
மாட்டிறைச்சி நிஹாரி, ஆட்டிறைச்சி கோர்மா, பட்டர் சிக்கன், கொண்டைக்கடலைக் கறி போன்ற உணவுகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உணவுகளில் மஞ்சள், கறி மசாலா உள்ளிட்ட பாகிஸ்தானிய உணவுகளில் பயன்படுத்தப்படும் சுவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. உணவுகள் சுவையாக இருப்பது மட்டுமின்றி, விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்க வேண்டும் என்பதால் அவற்றின் தயாரிப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உணவுகளின் சுவை மற்றும் தரத்தை உறுதிப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் பலமுறை சோதனை செய்து, தேவையான மாற்றங்களையும் மேற்கொண்டுள்ளனர். உணவு தயாரிப்பு நடைமுறைகளும் ஹலால் தேவைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் ஜீஷான் அலிக்காகப் பாகிஸ்தானிய மசாலா பால் தேநீர் தயாரிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், சீனாவில் பயிற்சியில் இருந்தபோது அவருக்குச் சீனக் கருப்புத் தேநீரும் அரிசி உணவும் பிடித்துவிட்டது. இதனால் விண்வெளிப் பயணத்திற்கான உணவுப் பட்டியலில் அவற்றையும் கூடுதலாகச் சேர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். அவரது விருப்பத்திற்கேற்ப அந்த உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதிய குழுவினர் விண்வெளி நிலையத்தை அடைந்ததைத் தொடர்ந்து, அங்கிருந்த ஆறு வீரர்களும் இணைந்து உணவருந்துவதற்காகச் சிறப்பு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. சீன மற்றும் பாகிஸ்தானிய உணவுப் பழக்கங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விருந்து திட்டமிடப்பட்டது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் ஒரே இடத்தில் பணியாற்றும்போது அவர்களின் உணவுப் பழக்கங்களையும் கலாசாரத்தையும் மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஏற்பாடு காட்டுகிறது.
ஜீஷான் அலியின் விண்வெளிப் பயணம் உணவு ஏற்பாடுகளுடன் மட்டும் முடிவடையவில்லை. இந்தப் பயணத்தின்போது அவர் பல்வேறு அறிவியல் சோதனைகளிலும் பங்கேற்க உள்ளார். நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் தொடர்பான ஆய்வுகளில் சயனோபாக்டீரியா வளர்ச்சி, குறைந்த ஈர்ப்பு விசையில் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் திறன் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளன. மேலும், விண்வெளிச் சூழலில் குவினோவா விதைகளின் தாக்கம், கிராபீன் கலவைப் பொருட்களின் பாதுகாப்புத் திறன், தானாகச் சீரமைத்துக்கொள்ளும் கார்பன் ஃபைபர் பொருட்களின் செயல்திறன் போன்றவையும் பரிசோதிக்கப்பட உள்ளன.
இந்தப் பயணம் பாகிஸ்தானின் விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கும் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. சீனா தனது விண்வெளித் திட்டத்தில் வெளிநாட்டு வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான புதிய முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆராய்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரு வீரரின் உணவுப் பழக்கம் முதல் அறிவியல் ஆய்வுகள் வரை அனைத்தையும் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஏற்பாடு, எதிர்கால விண்வெளிப் பயணங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து செயல்படுவதற்கான புதிய வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்