பத்திரிகையாளராகத் தொடங்கி சர்வதேச நிதி உலகம் வரை... Nvidia CEO-வைச் சுற்றி இத்தனை மர்மங்களா?

காங் வெய் மற்றும் ஆலிஸ் ஹுவாங் இருவரும் நீண்டகாலமாகத் தொழில் கூட்டாளிகளாகவும், தனிப்பட்ட உறவிலும் இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன.
பத்திரிகையாளராகத் தொடங்கி சர்வதேச நிதி உலகம் வரை... Nvidia CEO-வைச் சுற்றி இத்தனை மர்மங்களா?
Published on: 
Updated on: 
2 min read

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்கைச் சுற்றியுள்ள சர்ச்சை நாளுக்கு நாள் புதிய திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. அவருடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற சீனப் பெண்ணின் கடந்தகால வாழ்க்கை, நிதி நிறுவனங்களுடனான தொடர்புகள், சீனாவின் தொழில்நுட்ப வணிக வட்டாரம் எனப் பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. குறிப்பாக, சீனாவில் பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் நிதி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் முக்கியப் பொறுப்புகளை எட்டியது கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள கிராமப்புறப் பகுதியில் பிறந்த ஆலிஸ் ஹுவாங், தனது ஆரம்பகாலப் பணியை சீன அரசுக்குச் சொந்தமான சிசிடிவி தொலைக்காட்சியில் பத்திரிகையாளராகத் தொடங்கியுள்ளார். பின்னர் ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகத் துறை தொடர்பான படிப்பை முடித்த அவர், வங்கித் துறைக்குள் நுழைந்தார். எச்எஸ்பிசி வங்கியிலும், சீனாவின் சிட்டிக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்திலும் பணியாற்றியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பிறகு, சீன முதலீட்டாளர் காங் வெய் என்பவரால் தொடங்கப்பட்ட ஹெக்சி கேபிடல் என்ற தனியார் முதலீட்டு நிறுவனத்தில் 2015ஆம் ஆண்டு இணைந்தார்.

காங் வெய் மற்றும் ஆலிஸ் ஹுவாங் இருவரும் நீண்டகாலமாகத் தொழில் கூட்டாளிகளாகவும், தனிப்பட்ட உறவிலும் இருந்ததாகச் செய்திகள் கூறுகின்றன. சீனாவின் நிதி வட்டாரத்தில் செல்வாக்கு மிக்க ஜோடியாக அவர்கள் அறியப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காங் வெய்க்கு சீனாவின் பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்புகளுடன் பிரச்சினைகள் இருந்துள்ளன. பங்குச் சந்தை விதிமீறல்கள் தொடர்பாக அவருக்கு 2018 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில் அபராதம் விதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு அபராதங்களின் மொத்தத் தொகை 29 லட்சம் யுவான் எனக் கூறப்படுகிறது. மேலும், பங்குச் சந்தை முறைகேடு சந்தேகத்தின் பேரில் அவர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் காவலில் வைக்கப்பட்டதாக சீன ஊடகமான கெய்சின் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பின்னணியும் ஆலிஸின் முந்தைய வணிகத் தொடர்புகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைப் பயன்படுத்தி தனது வணிகத்தை விரிவுபடுத்த ஆலிஸ் சிங்கப்பூர் பக்கம் கவனம் செலுத்தியுள்ளார். 2023ஆம் ஆண்டு, சீன விளையாட்டு நிறுவனத்துடன் தொடர்புடைய சிங்கப்பூரைச் சேர்ந்த மெகாஸ்பீட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் அவர் முக்கியப் பொறுப்பை ஏற்றார். ஆரம்பத்தில் விளையாட்டுத் துறையில் செயல்பட்ட அந்த நிறுவனம், பின்னர் செயற்கை நுண்ணறிவுக்குத் தேவையான கணினி மையங்கள் மற்றும் கிளவுட் சேவைகள் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியது. இதன் மூலம் என்விடியா தயாரிக்கும் அதிநவீன சிப்களைப் பெறுவதற்கான வணிக வாய்ப்புகளும் உருவாகின.

அமெரிக்கா, சீனாவுக்கு சில அதிநவீன என்விடியா சிப்களை நேரடியாக விற்பனை செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் உள்ள கணினி மையங்கள் மூலம் அவற்றின் கணினித் திறனைப் பயன்படுத்தும் வாய்ப்பு சீன நிறுவனங்களுக்கு இருந்தது. இந்தச் சூழலில், ஆலிஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் சீன முதலீட்டாளர்களைச் சந்தித்து நிதி திரட்டியதாகவும், என்விடியா சிப்களைப் பெறுவதற்கான தங்களது தொடர்புகளைப் பற்றி எடுத்துரைத்ததாகவும் பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மெகாஸ்பீட்டின் ஆரம்பகால என்விடியா சந்திப்புகளில் ஒன்றில் ஆலிஸும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அலிபாபாவுடன் அந்த நிறுவனத்துக்கு இருந்த வணிகத் தொடர்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. 2024ஆம் ஆண்டு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வழியாக அலிபாபா, மெகாஸ்பீட்டுக்கு கடன் வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் என்விடியா, மெகாஸ்பீட், அலிபாபா ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான வணிகத் தொடர்புகள் விசாரணையின் கவனத்தைப் பெற்றுள்ளன.

ஆலிஸ் சீனாவின் உளவுத்துறையான MSS அமைப்புடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. மெகாஸ்பீட்டின் வணிக நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் விசாரணை தொடங்கிய பின்னர், ஆலிஸின் தொடர்புகள் பற்றி சீன உளவுத்துறை விசாரித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவர் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டார் என்பதற்கான உறுதியான ஆதாரம் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. சீன வெளியுறவு அமைச்சகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என மறுத்துள்ளது.

ஆலிஸ் ஹுவாங் தொடர்பான சர்ச்சை தீவிரமடைந்துள்ள நிலையில், என்விடியா நிறுவனத்தின் இயக்குநர் குழு தனிப்பட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. நிறுவனத்தின் ரகசியத் தகவல்கள் அல்லது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு பாதிக்கப்பட்டதா என்பதையும் ஆய்வு செய்யவுள்ளது. ஒரு பத்திரிகையாளராகத் தொடங்கி, நிதி உலகம் வழியாக சர்வதேச தொழில்நுட்ப வணிகத்தில் இடம்பிடித்த ஆலிஸின் பின்னணி தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர்புகளுக்குப் பின்னால் உண்மையில் என்ன நடந்தது என்பது விசாரணைகளின் முடிவில்தான் தெரியவரும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.