

இந்து மதம் ஆசியக் கண்டம் முழுவதும் பரவி, வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. நேபாளம், பூடான், ஃபிஜி, இந்தோனேசியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளிலும் பரவலாக இந்து மதத்தினர் வசிக்கின்றனர்.
இந்தோனேசியாவில் ஒரு வியத்தகு இந்து மத வரலாற்றுச் சின்னமாக, எரிமலைக்கு அருகில் அமைந்துள்ள விநாயகர் சிலை திகழ்கிறது. அந்த நாட்டின் கிழக்கு எல்லையில், ஜாவாவின் டெங்கர் மலைகளின் உச்சியில், நூற்றாண்டுகள் பழமையான இந்த விநாயகர் சிலை அமைந்துள்ளது.
மக்கள் மலையைக் கடந்து, 7,641 அடி உயரத்தில் உள்ள உயிரோட்டமுள்ள, செயல்படும் எரிமலையின் மீது ஏறிச் சென்று இந்த விநாயகரை வழிபடுகின்றனர்.
இந்த விநாயகர் சிலை அமைந்துள்ள டெங்கர் செமெரு (Tengger Semeru) தேசியப் பூங்காவில் உள்ள பிரமோ மலை, இந்தோனேசியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகளில் ஒன்றாகும்.
இந்த மலைக்கு பிரம்மாவைக் குறிக்கும் வகையிலேயே ‘பிரமோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. டெங்கர் மக்கள், இந்து நாள்காட்டியின்படி வழிபாட்டுச் சடங்குகளைச் செய்து, பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளுடன், அனிமிசம் (இயற்கை வழிபாடு) மற்றும் மகாயான பௌத்தத்தின் கூறுகளையும் இணைத்து, தங்களது உள்ளூர் கடவுளான இடா சங் ஹியாங் விதி வாசாவை (Ida Sang Hyang Widhi Wasa) வணங்குகிறார்கள்.
ஜாவாவில் உள்ள இந்துக்களும், டெங்கரீஸ் (டெங்கர் மாசிஃப் பழங்குடியினர்) சமூகத்தினரும், இந்தச் சிலை செயல்படும் எரிமலையில் இருந்து தங்களைப் பாதுகாக்கும் என நம்புகின்றனர். அதற்காக, இந்த விநாயகருக்கு பழங்கள், மலர்கள் உள்ளிட்டவற்றைக் காணிக்கையாக வைக்கின்றனர்.
செவி வழிக் கதைகளின்படி, இந்தச் சிலை சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு எரிமலையின் விளிம்பில் நிறுவப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனைமுகக் கடவுளான விநாயகர், ஆசிய இறை வரலாற்றில் மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டவர். கி.பி. 4–5ஆம் நூற்றாண்டு முதல் மக்கள் ஆனைமுகம் கொண்ட கணேசரை வழிபட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
கி.பி. 550–600க்கு இடைப்பட்ட காலத்தில், விநாயகர் சிலைகள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவிலும் தோன்றியதாக அறியப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.