
நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வன்முறை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டு வருகிறது. பண்டிட்ஸ் எனப்படும் கொள்ளைக்காரர்கள் தான் இம்மாதிரியான தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அதேபோல போகோ ஹராம் என்ற பயங்கரவாத குழுக்களும் தனி இஸ்லாமிய நாடு கோரி இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இந்த நிலையில் நைஜீரியாவின் வடமேற்கு மாகாணமான சோகோட்டோவில் கோரோன்யா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறும் என்பதால் அன்றைய நாள் கூட்டம் அலைமோதும். வியாபாரிகளும் மக்களும் பிஸியாக இருப்பார்கள். அப்போது கூட்டத்துக்குள் நுழைந்த சுமார் 200 நபர்களைக் கொண்ட மர்ம கும்பல் துப்பாக்கிகளைக் கொண்டு கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளியிருக்கிறது.
செய்வதறியாது திகைத்த மக்களில் பலர் அவர்களால் சுட்டுகொல்லப்பட்டனர். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 43 மக்கள் கொலை செய்யப்பட்டதாகவும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் மாகாண கவர்னர் அமினு வசிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதேபோல் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி மற்றொரு கிராமத்தில் புகுந்த பண்டிட்ஸ் கொள்ளைக்காரர்கள் 19 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர்.