

உலகின் மிகத் தொலைதூர மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளில் ஒன்றான டிரிஸ்டன் டா குன்ஹாவில் (Tristan da Cunha), 'ஹண்டாவைரஸ்' (Hantavirus) தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரை மீட்க பிரிட்டிஷ் ராணுவம் நடத்திய 'ஏர்-டிராப்' (Air-drop) ஆபரேஷன் ஒட்டுமொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவே, எந்த ஒரு விமான நிலையமும் இல்லாத இந்தச் சிறிய தீவில் வசிக்கும் ஒரு குடிமகனுக்கு ஏற்பட்ட உயிருக்கு ஆபத்தான வைரஸ் பாதிப்பு, ஒரு த்ரில்லர் பட பாணியில் மருத்துவக் குழுவினரை வானத்தில் இருந்து குதிக்க வைத்திருக்கிறது.
இந்தச் சம்பவத்தின் பின்னணி மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. 'எம்.வி. ஹொண்டியஸ்' (MV Hondius) என்ற சுற்றுலா கப்பலில் பயணம் செய்த ஒருவருக்கு ஹண்டாவைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இந்தத் தீவில் மொத்தம் 221 பேர் மட்டுமே வசிக்கின்றனர். அங்கே ஒரு சிறிய மருத்துவமனையும், இரண்டே இரண்டு மருத்துவர்களும் மட்டுமே உள்ளனர். அந்த நோயாளிக்கு ஆக்சிஜன் அளவு மிக வேகமாகச் குறைந்த நிலையில், கப்பல் மூலம் அங்கிருந்து மருந்துகளைக் கொண்டு செல்ல குறைந்தது ஒரு வார காலம் ஆகும். ஆனால், நோயாளிக்கு இருந்த கால அவகாசமோ மிகக் குறைவு.
இதனை ஒரு அவசர நிலைப் பிரகடனமாக அறிவித்த பிரிட்டிஷ் அரசாங்கம், 16 ஏர் அசால்ட் பிரிகேடை (16 Air Assault Brigade) களத்தில் இறக்கியது. இதில் வியப்பு என்னவென்றால், அந்தத் தீவில் விமானங்கள் தரையிறங்க ஓடுதளம் கிடையாது. எனவே, ஆறு பாராசூட் வீரர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) நிபுணர்களான ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் ஆகியோர் 7,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் தீவுக்குள் குதிக்க முடிவு செய்யப்பட்டது. பிரிட்டனில் இருந்து சுமார் 9,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தீவை அடைய, ஆர்.ஏ.எஃப் (RAF) ஏ400எம் ரக ராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டது. நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதியுடன் பறந்த இந்த விமானம், அட்லாண்டிக் கடலின் கடும் காற்றையும் பொருட்படுத்தாமல் தீவை நெருங்கியது. பாராசூட் வீரர்கள் அந்தத் தீவின் கரடுமுரடான ஒரு கோல்ஃப் மைதானத்தில் பத்திரமாகத் தரையிறங்கினர். அவர்களுடன் சுமார் 3.3 டன் எடையுள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களும் வானத்தில் இருந்து பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டன.
ஹண்டாவைரஸ் என்பது பொதுவாக எலிகள் மற்றும் கொறித்துண்ணிகள் மூலம் பரவும் ஒரு கொடிய வைரஸ் ஆகும். இது நுரையீரலைத் தாக்கி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். தற்போது அந்த நோயாளிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் சீரான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் ராணுவ வரலாற்றிலேயே, மனிதாபிமான அடிப்படையில் மருத்துவக் குழுவினர் பாராசூட் மூலம் குதித்து ஒருவரைக் காப்பாற்றுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.