ஒவ்வொரு மணி நேரமும் 5 பெண்கள் மரணம்.. பாதுகாப்பாக இருக்க வேண்டிய வீடே எமனாக மாறும் அவலம்! ஐநா-வின் அறிக்கை சொல்வது என்ன?

சுமார் 60%, அதாவது 47,000 கொலைகளானது அந்த பெண்களின் கணவர் அல்லது நெருங்கிய உறவினரால் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Domestic violence against women
Domestic violence against women
Published on: 
Updated on: 
2 min read

பெண்கள் பாதுகாப்பாக உணரவேண்டிய வீடே அவர்களுக்கு எதிரான ஒன்றாக அமைந்திருப்பதாக ஐநா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2025-ம் ஆண்டில், உலகெங்கிலும் சுமார் 47,000 பெண்களும் சிறுமிகளும் தங்களது கணவன்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 129 மரணங்கள் அல்லது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தோராயமாக ஐந்து பெண்களும் சிறுமிகளும் கொலைசெய்யப்படுவதற்கு சமமாகும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன.

ஐ.நா. போதைப்பொருள், குற்ற அலுவலகம் (UNODC) மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு ஆகியவற்றால் வெளியிடப்படும் வருடாந்திர அறிக்கையில், 2025-ம் ஆண்டில் 78,000 பெண்கொலைகள் நிகழ்ந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 60%, அதாவது 47,000 கொலைகளானது அந்த பெண்களின் கணவர் அல்லது நெருங்கிய உறவினரால் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த தரவுகளை வெளியிட்ட ஐநா, ஆப்பிரிக்காவில் இத்தகைய கொலைகள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

2025-ம் ஆண்டில், ஆப்பிரிக்காவில் 22,100 பெண்களும், சிறுமிகளும் தங்களது கணவன்கள் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஆசியாவில் 15,100 இறப்புகளும், அமெரிக்காவில் 7,400 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஐரோப்பாவில் சுமார் 2,100 கொலைகளும், ஓசியானியாவில் ஏறத்தாழ 300 கொலைகளும் பதிவாகியுள்ளதாக ஐநா குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆண்களை விடப் பெண்களே தங்களின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொலை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இருப்பதாகவும் ஐநா குறிப்பிட்டுள்ளது. இது மட்டுமின்றி , உலகம் முழுவதும் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையை அனுபவித்து வருவதாகவும் ஆனாலும் அவர்களில் ஏழு சதவீதம் பேர் மட்டுமே காவல்துறையிடம் புகார் அளிப்பதாகவும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் தனி அறிக்கை ஒன்று கண்டறிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு அவர்கள் புகாரளிக்காமல் இருப்பதற்கு காரணம், அவர்களின் வீடுகள், குழந்தைகள், நிதிப் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உயிர்கள் என அனைத்தையும் பணயம் வைப்பதாக அது அமையும் என்பதால் பெண்கள் புகாரளிக்க முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, பாதிக்கப்படும் பெண்களில் வெறும் 23 சதவிகிதத்தினர் மட்டுமே தங்கள் குடும்பத்தினர் , சமூகம் அல்லது அதிகாரிகளிடம் உதவியை நடுவதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து, UNODC-யின் நிர்வாக இயக்குநர் மோனிகா ஜூமா, "அச்சமூட்டும் மனப்பான்மைகள், சமூக நெறிகள் மற்றும் நிறுவனப் பாதுகாப்புகளின் தோல்வி ஆகியவையால் மனைவி, மகள், தாய் அல்லது சகோதரியைக் கொல்வது என்பது 'சகித்துக்கொள்ளக்கூடியதாக' மாறும் ஒரு சூழலை உருவாக்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களைப் பாதுகாக்க வேண்டிய அமைப்புகள் மீது பெண்கள் படிப்படியாக நம்பிக்கையை இழந்து வருவதையும் இது வெளிப்படுத்துவதாக குறிப்பிடுகின்றனர்.

மேலும், ஜிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பின் (UN Women) துணை நிர்வாக இயக்குநரான கும்போன்ஸ்வாண்டா, “இன்று இதைப் பார்க்கும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவருக்கும், நாங்கள் உங்களை ஒவ்வொரு முறையும் நம்புகிறோம். நீங்கள் நம்பப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்பதை நீங்கள் ஒருபோதும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.