2 நாளில் புதிய அரசு அமையவேண்டும் இல்லையென்றால்...? - எச்சரிக்கும் இலங்கை மத்திய வங்கி!

2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. 
2 நாளில் புதிய அரசு அமையவேண்டும் இல்லையென்றால்...? - எச்சரிக்கும் இலங்கை மத்திய வங்கி!
Published on
Updated on
1 min read

இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் அந்நாட்டு ராணுவம் சிறப்பு பாதுகாப்பு அளித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக காலி முகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியேற காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், ஒரு வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமனம் செய்யப்படுவார் என அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதாவது இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிருபிக்கும் வகையில் அரசு சார்பில் ஒரு வாரத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரவையும் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில், 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் இலங்கையில் பொருளாதாரம் சீர்குலைந்து விடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கே, இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் சீர்குலைந்துவிடும் என்றும், அடுத்த இரு வாரங்களில் அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தாவிட்டால் மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து தான் விலக போவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போதைய நெருக்கடிக்கு அரசியல் தீர்வு இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் வெற்றியடையாது எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com