துபாய், தோஹா மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு.. பற்றி எரியும் துறைமுகங்கள் - அதிரும் ஐக்கிய அரபு அமீரகம்!

ஒரு கப்பல் தளம் தீப்பற்றி எரிந்ததாகச் செயற்கைக்கோள் படங்களும் நேரில் பார்த்த சாட்சிகளும்...
துபாய், தோஹா மீது ஈரான் சரமாரி ஏவுகணை வீச்சு.. பற்றி எரியும் துறைமுகங்கள் - அதிரும் ஐக்கிய அரபு அமீரகம்!
Published on
Updated on
2 min read

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் தற்போது ஒரு பயங்கரமான கட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் நடத்திய 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) மற்றும் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கம்மெய்னியின் மரணத்தைத் தொடர்ந்து, ஈரான் தனது மிகக் கொடூரமான பதிலடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஈரானின் இலக்கு இஸ்ரேல் மட்டுமல்ல, அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் கத்தாரும் அடங்கும்.

துபாய் மற்றும் கத்தார் தலைநகர் தோஹாவில் நேற்று (மார்ச் 1, 2026) இரண்டாம் நாளாகத் தொடர்ச்சியான வெடிகுண்டுச் சத்தங்கள் கேட்டன. துபாயின் முக்கிய அடையாளமான 'பாம் ஜுமைரா' (Palm Jumeirah) மற்றும் சொகுசு ஹோட்டலான 'புர்ஜ் அல் அரப்' (Burj Al Arab) அருகே ட்ரோன் சிதறல்கள் விழுந்ததால் சிறிய அளவிலான தீ விபத்துக்கள் ஏற்பட்டன. குறிப்பாக, உலகின் பரபரப்பான வணிகத் துறைமுகங்களில் ஒன்றான துபாயின் 'ஜெபல் அலி' (Jebel Ali) துறைமுகத்தில் ஈரான் நடத்திய தாக்குதலால் கரும்புகை வானை எட்டியது. ஒரு கப்பல் தளம் தீப்பற்றி எரிந்ததாகச் செயற்கைக்கோள் படங்களும் நேரில் பார்த்த சாட்சிகளும் உறுதிப்படுத்தியுள்ளன.

கத்தார் தலைநகர் தோஹாவிலும் ஏவுகணைச் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததால் பெரும் பதற்றம் நிலவியது. அங்குள்ள அமெரிக்க ராணுவத் தளமான 'அல் உதேய்ட்' (Al Udeid) தளத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத் தற்காப்பு அமைச்சகத்தின் தகவல்படி, ஈரான் இதுவரை சுமார் 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 541 ட்ரோன்களை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் (Tel Aviv) மற்றும் ஜெருசலேமில் அபாயச் சங்குகள் (Sirens) இடைவிடாது ஒலித்து வருகின்றன. ஈரான் ஏவிய ஏவுகணைகளை இஸ்ரேலின் 'ஏரோ' (Arrow) மற்றும் 'டேவிட்ஸ் ஸ்லிங்' (David’s Sling) போன்ற தற்காப்பு அமைப்புகள் தடுத்து நிறுத்தினாலும், அதன் சிதறல்கள் விழுந்து 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரான் இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகவும், இதனால் மில்லியன் கணக்கான மக்கள் பாதுகாப்பு அறைகளில் (Shelters) தஞ்சமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. துபாய், அபுதாபி மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் ஏர் இந்தியா உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களின் சேவைகளை ரத்து செய்துள்ளன. துபாயில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல் கட்டணங்களை அபுதாபி அரசாங்கமே ஏற்பதாக அறிவித்துள்ளது. போரின் தீவிரம் அதிகரித்து வருவதால், கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தையில் அதிரடியாக உயர்ந்துள்ளது, இது இந்தியப் பங்குச் சந்தைகளிலும் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரமான தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபை வன்மையாகக் கண்டித்துள்ளது. இருப்பினும், "தங்களின் இறையாண்மையைப் பாதுகாக்க இறுதிவரைப் போரிடுவோம்" என்று ஈரான் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், "ஈரானின் அணுஆயுதக் கனவை ஒழிப்பதே எங்கள் நோக்கம் என்றும் இன்னும் 1 மாதத்திற்கு போர் தொடரும்" என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com