அமெரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்.. 'தீர்ந்துப்போன' ஏவுகணைகள் மீண்டும் தயார்! ட்ரம்ப்பின் கணக்குகளைத் தலைகீழாக மாற்றிய உளவுத்துறை அறிக்கை!

ஆயிரக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம்
iran missiles
Published on
Updated on
2 min read

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்று வரும் கடுமையான போர் மற்றும் கடல்சார் மோதல்கள் உலக நாடுகளைப் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. ஈரானின் ராணுவ பலம் முற்றிலும் சிதைக்கப்பட்டுவிட்டது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்த நிலையில், அமெரிக்க உளவுத்துறையின் புதிய அறிக்கை அந்த வாதங்களைத் தவிடுப்பொடியாக்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும், ஈரானிடம் இன்னும் 70 சதவீத ஏவுகணைகள் பத்திரமாக இருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல், அமெரிக்கப் படைகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் இந்த முக்கியமான கடல் பாதையில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடத்திய ஆலோசனையில், ஹார்முஸ் பகுதியில் இருந்த 33 ஏவுகணைத் தளங்களில் 30 தளங்களை ஈரான் மீண்டும் சரிசெய்து தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஈரானின் ரகசிய நிலத்தடி சேமிப்பு அறைகளில் 90 சதவீதம் எந்தப் பாதிப்பும் இன்றி இருப்பதாகவும், அவற்றில் ஆயிரக்கணக்கான டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் 'தி நியூயார்க் டைம்ஸ்' இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க, ஈரானின் தாக்குதல்களைச் சமாளித்து வரும் அமெரிக்கப் படைகளிடம் 'டோமாஹாக்' மற்றும் 'பேட்ரியாட்' போன்ற அதிநவீன ஏவுகணைகளின் இருப்பு அபாயகரமான அளவிற்குத் குறைந்து வருவதாகக் கூறப்படுவது வாஷிங்டன் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிபர் ட்ரம்ப் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளியிட்ட அறிக்கைகளில், ஈரானின் விமானப் படை மற்றும் கடற்படை முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டதாகவும் பெருமையுடன் கூறியிருந்தார். ஈரானின் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலைகளில் 75 சதவீதம் தரைமட்டமாக்கப்பட்டுவிட்டதாகப் பென்டகன் அதிகாரிகளும் மார்தட்டி வந்தனர். ஆனால், அமெரிக்கா சுமார் 13,000 இலக்குகளைத் தாக்கிய பிறகும், ஈரானின் ராணுவ பலம் குறையாமல் இருப்பது அமெரிக்காவின் இராஜதந்திரத்திற்கு விழுந்த அடியாகப் பார்க்கப்படுகிறது. ஈரானிடம் இன்னும் ஆயிரக்கணக்கான 'ஒன்-வே அட்டாக் டிரோன்கள்' (One-way attack drones) தயார் நிலையில் இருப்பதாக சிஎன்என் (CNN) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தப் போர் காரணமாக உலக அளவில் எரிசக்தி நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. போருக்கு முன்பு 60 முதல் 75 டாலராக இருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, தற்போது 100 முதல் 110 டாலர் வரை உயர்ந்துள்ளது. இது இந்தியா போன்ற இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 89 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது, அதில் 40 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. எண்ணெய் நிறுவனங்களின் சுமையைக் குறைக்க மத்திய அரசு வரிக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், நாட்டில் போதுமான அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாக இந்த வாரம் உறுதி அளித்துள்ளது.

தற்போது அமலில் இருக்கும் போர் நிறுத்தம் (Ceasefire) எப்போது வேண்டுமானாலும் உடையலாம் என்ற சூழல் நிலவுகிறது. ஈரான் முன்வைத்துள்ள அமைதி ஒப்பந்தத்தை ட்ரம்ப் நிர்வாகம் "குப்பை" என்று கூறி நிராகரித்துள்ளது. போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும், தடைகளை நீக்க வேண்டும் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மீது ஈரானின் அதிகாரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. ஈரானின் அணுசக்தித் திட்டங்களைக் கைவிடும் வரை பொருளாதாரத் தடைகள் நீக்கப்படாது என்பதில் ட்ரம்ப் உறுதியாக உள்ளார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான முட்டுக்கட்டையைத் தொடரச் செய்துள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணை இருப்பு குறைந்து வருவதாக வெளியாகும் தகவல்களை வெள்ளை மாளிகை மறுத்தாலும், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் கவலையடைந்துள்ளன. உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் தைவான் விவகாரத்தில் சீனாவின் நகர்வுகள் என உலகம் முழுவதும் போர் பதற்றம் நிலவும் வேளையில், அமெரிக்கா தனது ஏவுகணை இருப்பை ஈரானிடம் இழப்பது ஆபத்தானது என நிபுணர்கள் கருதுகின்றனர். இதற்கிடையில், சீனா இந்தப் போரை மிக உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், அமெரிக்காவின் ராணுவத் திறன் மற்றும் ஏவுகணைத் தடுப்பு முறைகளை ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் பிடிவாதம் மற்றும் அமெரிக்காவின் பிடிவாதத்தால் இந்த எரிசக்தி யுத்தம் எப்போது முடியும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com