ஒரே ஒரு பட்டன்.. சிதறிப்போகும் அமெரிக்க கப்பற்படை? ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் 'மரணப் பொறிகள்'! என்ன நடக்கிறது?

தற்போது ஓமன் வளைகுடாவிற்கு அப்பால் பாதுகாப்பான தூரத்தில் தனது கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது...
 Hormuz raises
Hormuz raises
Published on
Updated on
2 min read

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் ஒரு புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியபோது, அது ஒரு சாதாரண வான்வழித் தாக்குதலோடு முடிந்துவிடும் என்றுதான் உலகம் கருதியது. ஆனால், ஈரான் தனது புவியியல் பலத்தைப் பயன்படுத்தி, உலகையே அதிர வைக்கும் ஒரு பதிலடியைக் கொடுத்துள்ளது. உலக வர்த்தகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் 'ஹார்முஸ் ஜலசந்தி' பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. வெறும் 21 முதல் 34 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த குறுகிய கடல் வழிப்பாதையை ஈரான் முடக்கியுள்ளது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

ஈரானிடம் அமெரிக்காவைப் போலப் பிரம்மாண்டமான விமானம் தாங்கி கப்பல்களோ அல்லது அதிநவீன போர் விமானங்களோ இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த குறுகிய நீர்ச்சந்தியில் அமெரிக்கக் கப்பற்படையை நிலைகுலையச் செய்ய ஈரான் மிக நுணுக்கமான 'மரணப் பொறிகளை' விரித்துள்ளது. குறிப்பாக, கடலுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள், சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கரையில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் என முப்பரிமாணத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகிவிட்டது. அமெரிக்கக் கப்பல்கள் இந்த நீர்ச்சந்திக்குள் நுழைந்தால், அவை ஈரானின் ஏவுகணை வீச்சுக்கு மிக எளிதாக இலக்காகும். இதனால் தான், உலகிலேயே வலிமையான கப்பற்படையைக் கொண்டுள்ள அமெரிக்கா, தற்போது ஓமன் வளைகுடாவிற்கு அப்பால் பாதுகாப்பான தூரத்தில் தனது கப்பல்களை நிறுத்தி வைத்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் மூன்றில் ஒரு பங்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பாதையை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை தாறுமாறாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தந்திரமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது; அதாவது, ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே இருக்கிறது, ஆனால் ஈரானின் "தொழில்நுட்ப விதிமுறைகளை" பின்பற்றும் கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், ஈரானுக்கு ரகசியமாக 'வரி' அல்லது 'கப்பம்' கட்டும் கப்பல்களை மட்டுமே அது அனுமதிக்கிறது. இந்த நிபந்தனையை மீறிச் செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், காப்பீட்டு நிறுவனங்கள் அந்தக் கடல் பகுதிக்குச் செல்லவே தயங்குகின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விவகாரத்தில் மிகவும் ஆவேசமாகச் செயல்பட்டு வருகிறார். ஈரானின் இந்த பிடிவாதத்தைத் தகர்க்க, ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் ஹார்முஸ் ஜலசந்தியைச் சுதந்திரமான போக்குவரத்திற்குத் திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில் ஈரானின் மின்சாரம் மற்றும் பாலங்கள் போன்ற முக்கியக் கட்டுமானங்கள் குண்டு வீசி அழிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், நிலைமை மோசமானது. இஸ்ரேல் ஏற்கனவே ஈரானின் சில முக்கிய ரயில்வே பாலங்களைத் தகர்த்துவிட்டது. இதற்குப் பதிலடியாக ஈரான் தனது நீர்ச்சந்தியில் மேலும் அதிகமான கண்ணிவெடிகளைத் தூவியுள்ளது.

இந்தக் கண்ணிவெடிகள் தான் அமெரிக்காவிற்குப் பெரும் தலைவலியாக உள்ளன. கடலின் தரைப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் மற்றும் நீரின் அடியில் மிதக்கும் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அழிப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். இதற்காக அமெரிக்கா தனது அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் லேசர் கருவிகளைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 'நிஞ்ஜா பிஷ்' போன்ற தானியங்கி நீர்மூழ்கிக் கருவிகள் மூலம் கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா முயற்சி செய்தாலும், ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் அச்சுறுத்தல் இருக்கும்போது இந்தச் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமற்றது. ஒருபுறம் கண்ணிவெடிகளை அகற்றினால், மறுபுறம் ஈரான் சிறிய படகுகள் மூலம் மீண்டும் கண்ணிவெடிகளைத் தூவிவிடுகிறது.

டிரம்ப் நிர்வாகம் இப்போது ஈரானின் துறைமுகங்களை முழுமையாக முடக்கும் 'பிளாக் எய்ட்' (Blockade) நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஈரானுக்குச் சொந்தமான கப்பல்கள் அல்லது ஈரானுக்கு வரி செலுத்தும் எந்தக் கப்பலையும் சர்வதேசக் கடல் பகுதியில் தடுத்து நிறுத்த அமெரிக்கக் கப்பற்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. "எங்கள் பக்கம் வரும் எந்த ஈரானியக் கப்பலும் உடனடியாக அழிக்கப்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால், ஈரான் சளைக்காமல் "எங்கள் துறைமுகங்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால், பாரசீக வளைகுடாவில் உள்ள எந்தத் துறைமுகமும் பாதுகாப்பாக இருக்காது" என்று அண்டை நாடுகளுக்கும் மறைமுக மிரட்டல் விடுத்துள்ளது. இது ஒட்டுமொத்த அரபு நாடுகளையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த 21 கிலோமீட்டர் 'சோக் பாயிண்ட்' (Chokepoint) பகுதியில் நடக்கும் இந்த அதிகாரப் போட்டி, உலகப் பொருளாதாரத்தை ஒரு மிகப்பெரிய மந்தநிலைக்குத் தள்ளக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர். உலக வங்கி ஏற்கனவே இந்தப் போரினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு 100 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கத் தயாராகி வருகிறது. அமெரிக்காவின் தொழில்நுட்ப வலிமையா அல்லது ஈரானின் புவியியல் தந்திரமா? என்பதில் தான் அடுத்த சில வாரங்களில் உலக அமைதி அடங்கியுள்ளது. டொனால்ட் டிரம்ப் தனது பிடிவாதத்தைக் குறைப்பாரா அல்லது ஈரானின் 'மரணப் பொறிகளை' மீறித் தாக்குதல் நடத்துவாரா என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஒரு சின்னத் தவறு நடந்தாலும், அது மூன்றாம் உலகப் போருக்குக் கூட வித்திடலாம் என்கிற அச்சம் நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com