ஈரான் உச்ச தலைவர் முஜ்தபா காமேனிக்கு என்னாச்சு? கருகிய முகம்.. செயற்கை கால்.. ரகசிய இடத்தில் நடக்கும் சிகிச்சை!

தற்போது வரை வெறும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்...
முஜ்தபா காமேனி
முஜ்தபா காமேனி
Published on
Updated on
2 min read

ஈரான் நாட்டின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள முஜ்தபா காமேனி, தற்போது அந்நாட்டு ராணுவத்தின் உயர்மட்ட ஜெனரல்களின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவரது தந்தை அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலில் படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முஜ்தபா, தனது மனைவி மற்றும் மகனை பறிகொடுத்த சோகத்தில் தற்போது ஒரு ரகசிய இடத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஈரானின் முன்னாள் அதிபர் அகமதி நிஜாத்தின் நெருங்கிய உதவியாளரான அப்துல்ரேசா தவாரி இதுகுறித்துக் கூறுகையில், முஜ்தபா ஒரு நிறுவனத்தின் இயக்குனர் போலச் செயல்படுகிறார் என்றும், ராணுவ ஜெனரல்கள் அந்த நிறுவனத்தின் போர்டு மெம்பர் போல இருந்து அனைத்து முக்கிய முடிவுகளையும் கூட்டாக எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் முஜ்தபா காமேனிக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. அவரது ஒரு கால் மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக செயற்கை கால் பொருத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி அவரது கையும் பலத்த காயமடைந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, அவரது முகம் மற்றும் உதடுகள் தீக்காயங்களால் கடுமையாகச் சிதைந்துள்ளதால், அவரால் சரியாகப் பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே அவர் பொதுவெளியில் வீடியோக்களிலோ அல்லது ஆடியோ செய்திகளிலோ தோன்றாமல் இருக்கிறார். தனது சிதைந்த முகத்தையோ அல்லது பலவீனமான குரலையோ வெளிப்படுத்தினால் அது தன்னை பலவீனமாகக் காட்டும் என்று அவர் கருதுவதால், தற்போது வரை வெறும் எழுத்துப்பூர்வமான அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

இஸ்ரேலின் உளவு அமைப்புகள் முஜ்தபா தங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து மீண்டும் தாக்குதல் நடத்திவிடுமோ என்ற அச்சத்தில், ஈரானின் மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அவரை நேரில் சென்று பார்ப்பதைத் தவிர்த்து வருகின்றனர். ஒரு இதய அறுவை சிகிச்சை நிபுணரான ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் மட்டுமே முஜ்தபாவின் சிகிச்சையை நேரில் கண்காணித்து வருகின்றனர். ஈரானின் உயர்மட்ட மத குருமார்களின் செல்வாக்கு மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில், தற்போது 'அல்ட்ரா ஹார்டு லைனர்ஸ்' எனப்படும் தீவிரவாதப் போக்குடைய ராணுவ ஜெனரல்களின் கை ஓங்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு முதல் வெளியுறவு விவகாரங்கள் வரை அனைத்தையும் இந்த ஜெனரல்கள் குழுவே தீர்மானிக்கிறது.

தற்போது ஈரானின் உண்மையான அதிகாரம் 'புரட்சிகர பாதுகாப்புப் படை' (IRGC) வசம் சென்றுள்ளது. அஹ்மத் வாஹிதி தலைமையிலான இந்த ராணுவப் படை, நாட்டின் அனைத்து முக்கியத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. குறிப்பாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக முன்னாள் ராணுவ தளபதி முகமது பாகர் சொல்காத்ர் நியமிக்கப்பட்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மசூத் பெசெஷ்கியான் மற்றும் அவரது அமைச்சரவைக்கு தற்போது மிகக் குறைந்த அதிகாரமே உள்ளது. அவர்கள் வெறும் உள்நாட்டு விவகாரங்கள், உணவு மற்றும் எரிபொருள் விநியோகம் போன்ற அன்றாட நிர்வாகப் பணிகளை மட்டுமே கவனித்து வருகின்றனர். நாட்டின் மிக முக்கியமான ராணுவ மற்றும் ராஜதந்திர முடிவுகளில் இருந்து அவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.

ஈரானின் வெளியுறவுத் துறையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் சர்வதேச விவகாரங்களைக் கவனித்து வருகிறார். இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள், கடல் வழிப் பாதைகளை மூடுவது போன்ற அதிரடி முடிவுகளை ராணுவ ஜெனரல்களே நேரடியாக எடுக்கின்றனர். அமெரிக்காவுடனான ரகசியப் பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் முதன்முறையாக ராணுவத் தளபதிகள் நேரடியாகப் பங்கேற்று வருகின்றனர்.

ஈரானின் அரசியல் அமைப்பு எப்போதும் பல்வேறு அதிகார மையங்களைக் கொண்டதாகவே இருந்து வருகிறது. தற்போதும் அதிபர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆகியோர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களாக இருந்தாலும், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மட்டும் ராணுவத் தளபதிகளிடமே உள்ளது. தற்போது வரை ஈரானின் ராணுவ உயர் அதிகாரிகள் அனைவரும் ஒற்றுமையாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆனால் உச்ச தலைவர் முஜ்தபா காமேனி படுத்த படுக்கையாக இருப்பதும், ராணுவம் முழு அதிகாரத்தைக் கைப்பற்றியிருப்பதும் ஈரானின் எதிர்காலம் குறித்த பல சந்தேகங்களையும், அச்சங்களையும் சர்வதேச அளவில் கிளப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com