இம்ரான்கான் அரசுக்கு ஆபத்தா?.. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மறுதினம் ஒத்திவைப்பு!!

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மறுதினம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இம்ரான்கான் அரசுக்கு ஆபத்தா?.. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை மறுதினம் ஒத்திவைப்பு!!
Published on
Updated on
1 min read

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் இம்ரான் கான், கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் வாதியாகி  பிரதமராக ஆட்சியைப் பிடித்தவர். இந்த அரசின் மீது சமீபத்தில் எதிர்க்கட்சிகள் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்தன.

இதனையடுத்து இம்ரான் பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்து, ஆளும் கூட்டணியில் இருந்து முத்தாஹிதா குவாமி, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -குவைட் மற்றும் பலுசிஸ்தான் அவாமி ஆகிய 3 கட்சிகள் வெளியேற முடிவு செய்தன.

எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 342 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 171 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. இதில், இம்ரான் கட்சிக்கு 155 உறுப்பினர்களும், ஆறு கூட்டணி கட்சிகளை சேர்ந்த 21 உறுப்பினர்களும் ஆதரவு இருந்தது.

இந்த நிலையில், சில கூட்டணி கட்சிகளின் விலகல் முடிவு இம்ரானுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், தன் சொந்த கட்சியிலேயே இம்ரானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிவரும் 24 எம்.பி.,க்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்போம் எனவும் அறிவித்துள்ளனர்.

இதனால் பெரும் நெருக்கடியில் இம்ரான் சிக்கியுள்ளார். தான் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என உறுதியுடன் இருந்தாலும், பெரும்பான்மையை இழந்துள்ளதால், ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த ஆட்சி கவிழ்ந்தால் அடுத்து உடனடியாக தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன. பாகிஸ்தானை பொறுத்தவரையில் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவிக் காலத்தில் நீடித்தது கிடையாது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com