ஈரானில் போர் தொடங்கிய பிறகு அந்நாட்டின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மோஜ்தபா கமேனி, மக்கள் முன்னிலையில் தோன்றாமல் இருப்பது உலக நாடுகளிடையே மிகப்பெரிய சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்துப் பேசியிருப்பது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தெஹ்ரானில் உள்ள முக்கியக் கட்டடத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய அதிரடித் தாக்குதலில், மோஜ்தபாவின் தந்தை கொல்லப்பட்டார். அதே தாக்குதலில் மோஜ்தபாவும் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாகத் தகவல்கள் கசிந்தன. இது குறித்துப் பேசிய டிரம்ப், "அவர் ஏதோ ஒரு ரூபத்தில் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது மட்டும் நிச்சயம்" எனத் தனது பாணியில் பதிலளித்துள்ளார்.
ஃபாக்ஸ் நியூஸ் ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் இந்த ரகசியத்தை உடைத்துள்ளார். மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதம் ஒருபுறம் இருக்க, அவர் பதவிக்கு வந்த பிறகு முதல்முறையாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஒருபோதும் பின்வாங்காது என்கிற எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். தியாகிகளின் ரத்தத்திற்குப் பழிவாங்காமல் ஓயப்போவதில்லை என்று அவர் சூளுரைத்திருப்பது போர் பதற்றத்தை இன்னும் அதிகரித்துள்ளது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிட்டு, அண்டை நாடுகளைத் தொடர்ந்து தாக்க வேண்டும் என்றும், அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை மக்கள் முடக்க வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும், மோஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்து வெளிவந்துள்ள சில தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. 'தி சன்' ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, 56 வயதான இந்தத் தலைவர் தனது ஒரு காலை இழந்துவிட்டதாகவும், வயிறு மற்றும் கல்லீரல் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது தந்தை, மனைவி மற்றும் சகோதரி கொல்லப்பட்ட அதே தாக்குதலில் இவரும் மிக மோசமாகச் சிதைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஈரானிய தூதர் அலிமெசா சலாரியன் இது குறித்துப் பேசும்போது, "அவர் கைகால்களில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கேள்விப்பட்டேன்" எனத் தெரிவித்தது இந்த சந்தேகங்களுக்கு இன்னும் வலுசேர்த்துள்ளது.
மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், போர் தொடங்கியதிலிருந்து மோஜ்தபா கமேனி ஒருமுறை கூட நேரில் தோன்றவில்லை. அவர் வெளியிட்டதாகச் சொல்லப்படும் அந்த வீரமான அறிக்கை கூட, ஒரு வீடியோவாகவோ அல்லது தொலைக்காட்சியில் நேரலையாகவோ வரவில்லை; வெறும் உரையாக மட்டுமே வெளிவந்துள்ளது. அவர் உண்மையிலேயே பேசும் நிலையில் இருக்கிறாரா அல்லது கோமாவில் இருக்கிறாரா என்பதை ஈரான் அரசு மறைப்பதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. அவர் இன்னும் "ஏதோ ஒரு வடிவில்" உயிரோடு இருப்பதாக டிரம்ப் சொல்வது, அவர் செயற்கை சுவாசத்தில் இருக்கக்கூடும் என்பதைக் குறிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
இந்த மர்மங்கள் நீடித்து வரும் வேளையில், மத்திய கிழக்கு நாடுகளில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிற சூழல் நிலவுகிறது. ஒரு நாட்டின் உச்ச தலைவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருப்பது அந்த நாட்டு மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தனது பிடியை இறுக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மோஜ்தபா கமேனி மீண்டும் மக்கள் முன்னால் வந்து நின்றால் மட்டுமே இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதுவரை டிரம்ப் சொன்ன அந்த "மர்மமான நிலை" உலக அரசியலில் மிகப்பெரிய விவாதமாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.