
சீனாவில் மாயமான டென்னிஸ் வீராங்கனை பாதுகாப்பாக இருக்கிறாரா? என்பது குறித்த வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் சூவாய், சமீபத்தில் அந்நாட்டின் முன்னாள் துணை பிரதமர் ஜாங் கோலி மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினார்.
இந்த குற்றச்சாட்டை வெளியிட்ட நாள் முதல் பெங் சூவாய் மாயமானார். இதன் பின்னணியில் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசுக்கு பங்கு இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதால், இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
பெங் சூவாயின் பாதுகாப்பு மற்றும் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து உண்மையான ஆதாரங்களை வழங்குமாறு, ஐ.நா.வும், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளும் சீனாவை வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் பெங் சூவாய் பாதுகாப்பாக இருப்பதை காட்டும் வீடியோவை, சீன அரசு ஊடகம் தமது இணையத்தில் வெளியிட்டுள்ளது. நேற்று காலை தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற டீனேஜர் டென்னிஸ் போட்டியின் தொடக்க விழாவில் பெங் சூவாய் கலந்து கொண்டதாக கூறி, அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
இதுதவிர பெங் சூவாய் தமது நண்பர்களுடனும், பயிற்சியாளருடனும் வெளியே சென்று உணவு அருந்துவது போன்ற இரு வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன.