இலங்கையில் மீண்டும் பொருளாதார நெருக்கடியா...? 1 லிட்டர் பெட்ரோலின் விலை 25%மாக அதிகரிப்பு...

எரிசக்தி போக்குவரத்து பாதையான ஹார்மோஸ் நீர்சந்தியை மூடும் நிலையில் இருந்த நிலையில், இலங்கையில் தற்போது, 25% எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது
Sri Lanka petrol price
Published on
Updated on
2 min read

திசாநாயக்கவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்றம் காரணமாக, ஒரு லிட்டர் சாதாரண பெட்ரோலின் விலை ரூ.317-லிருந்து ரூ.398ஆக உயர்த்தப்பட்டது. அதேவேளையில், பொதுப் போக்குவரத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசலின் விலை ரூ.79 அதிகரித்து ரூ.382-ஆக உயர்ந்தது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் நாடுகளின் கூட்டுத் தாக்குதல்கள் மற்றும் தெஹ்ரானின் பதிலடி நடவடிக்கைகளால் வளைகுடா நாடுகள் முழுவதும் போர் பதட்டம் பரவியது. இதனால் முக்கிய உலகளாவிய எரிசக்தி போக்குவரத்து பாதையான ஹார்மோஸ் நீர்சந்தியை மூடும் நிலையில் இருந்த நிலையில், இலங்கையில் தற்போது, 25% எரிபொருளின் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம், அரசாங்கம் சில்லறை எரிபொருள் விலையை எட்டு சதவீதம் உயர்த்த உத்தரவிட்டதுடன், நுகர்வைக் கட்டுப்படுத்த பங்கீட்டு முறையையும் அறிமுகப்படுத்தியது. இந்த சூழ்நிலை காரணமாக இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறதா? என்ற ஐயத்தை 6தருகிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளின் போர் தாக்குதல்களைத் தொடர்ந்து உலகளாவிய எண்ணெய் சந்தைகள் நிலையற்றதாக இருப்பதாலும், உலகின் மிக முக்கியமான எண்ணெய் கப்பல் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்மோஸ் நீர்சந்தியைச் சுற்றி பதற்றம் அதிகரித்து வருவதாலும் இலங்கையில் எரிபொருள் விலை உயர்த்தாடுவதற்கான இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நீடிக்கக்கூடிய மோதல் ஒன்று தீவின் எரிசக்தி விநியோகத்தைப் பாதிக்கக்கூடும் என்றும், அதற்கு நாடு தயாராக வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கடந்த வாரம் கூறியிருக்கிறார். இதுமட்டுமின்றி, ஜனாதிபதி கடந்த 18ம் தேதி முதல் நான்கு நாள் வேலை வாரத்திற்கு உத்தரவிட்டார், மேலும் சாத்தியமான இடங்களில் வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு முதலாளிகளைக் கேட்டுக்கொண்டார். மேலும், புதன்கிழமைகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து எரிபொருள் நுகர்வு குறைகிறது. புதிதாக அமல்படுத்தப்பட்ட நான்கு நாள் வேலை வாரம், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்படும். இருப்பினும், சுகாதாரம், துறைமுகங்கள் மற்றும் அவசரகால நடவடிக்கைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அனுர குமார திசாநாயக்க கூறியிருந்தார்.

மேலும், மத்திய கிழக்கில் நடைபெறும் சண்டைகள், தொடர்ந்து நீடிக்கும் போர் பதட்டம் ஆகியவை 2022-ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்கான தனது முயற்சிகளைப் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கையில் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் விதமாக, மாபெரும் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், அவரது அரசியல் வாரிசின் பிற உறுப்பினர்களையும் பதவியிலிருந்து கட்டாயமாக நீக்கின. அவருக்குப் பிறகு, மதிப்பிழந்த அரசியல் உயர்மட்டங்களை சேர்ந்த மற்றொரு உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். அதன்பிறகு, 2024ம் ஆண்டின் இறுதியில், புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதில் நாட்டின் பாரம்பரிய அரசியல் மற்றும் பொருளாதாரரீதியாக மேல்நிலையில் உள்ளவர்களை நீண்ட காலமாக எதிர்த்து வந்த ஒரு தலைவரையும் அரசியல் கட்சியையும் ஆட்சிக்குக் கொண்டு வந்தன. அப்போது வந்ததுதான், அனுர குமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணி ஆட்சி. அவரது ஆட்சியில், இலங்கை மத்திய வங்கி, பணவியல் நிலைத்தன்மையை மேம்படுத்துதல், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட முக்கிய கொள்கை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப்பட்டது.

நிதி ஒருங்கிணைப்பு, வருவாய் திரட்டல் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும். மேலும், 2024-ஆம் ஆண்டில், இலங்கையின் பொருளாதாரம் ஊக்கமளிக்கும் வளர்ச்சியைக் காட்டியது. முதல் காலாண்டில் 5% விரிவாக்கம் பதிவானது, இது 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட -10.7% சுருக்கத்தை மாற்றியமைத்தது. பெரும்பாலும் மேம்பட்ட உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளால் உந்தப்பட்டு, நாட்டின் வளர்ச்சி தொடர்ந்தது, 2023-ஆம் ஆண்டில் 1.6% ஆக இருந்த வளர்ச்சி, மூன்றாம் காலாண்டில் 5.5% ஆக உயர்ந்தது. இவ்வாறு நாட்டின் வளர்ச்சியை படிப்படியாக முன்னோக்கி திசாநாயக்க கொண்டுசென்று கொன்றிருந்த சமயத்தில்தான், மதி கிழக்கில் போர் சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் ஆட்டோ டீசல் விலை ஒரு லிட்டருக்கு 303 இலங்கை ரூபாயிலிருந்து 382 ரூபாயாக உயர்ந்துள்ளது. சூப்பர் டீசல் விலை 353 ரூபாயிலிருந்து 443 ரூபாயாக அதிகரித்துள்ளது. பெட்ரோல் (92 ஆக்டேன்) விலை ஒரு லிட்டருக்கு 317 ரூபாயிலிருந்து 398 ரூபாயாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 95 ஆக்டேன் பெட்ரோல் விலை 365 ரூபாயிலிருந்து 455 ரூபாயாக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் விலையும் 30 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது. மேலும், தேசிய போக்குவரத்து ஆணையத்தின்படி, புதிய டீசல் விலைகளின் அடிப்படையில் பேருந்துக் கட்டணங்கள் 10 சதவீதத்திற்கும் மேல் உயரக்கூடும். இதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, வரும் மாதங்களில் எரிபொருள் விலை உயர்வால் பணவீக்கம் 5 முதல் 8 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மதிக்கிழக்கு நாடுகளில் தொடரும் போர் பதட்ட சூழல் என்பது இலங்கை போன்ற சிறு நாடுகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று தெளிவாக காட்டுகிறது. மேலும், இலங்கைக்கு இது மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com