"மெட்டாவில் 8,000 பேருக்கு வேலை காலி!" AI பக்கம் திரும்பிய மார்க் ஜுக்கர்பெர்க்!

பணிநீக்க நடவடிக்கையுடன் சேர்த்து, மேலும் 7,000 ஊழியர்கள் நிறுவனத்திற்குள் இருக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
Meta layoffs
Meta layoffsMeta layoffs
Published on
Updated on
2 min read

மெட்டா நிறுவனம் தனது கட்டமைப்பில் ஒரு பிரம்மாண்டமான மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக, உலகளவில் தனது நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களில் சுமார் 10 சதவீதத்தினரை, அதாவது 8,000 ஊழியர்களைப் பணியிலிருந்து நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் கூடுதல் கவனம் செலுத்தி, நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தவே இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த பணிநீக்க நடவடிக்கையுடன் சேர்த்து, மேலும் 7,000 ஊழியர்கள் நிறுவனத்திற்குள் இருக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு சார்ந்த பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே நிறுவனத்தில் இருந்த குழுக்களைக் கலைத்துவிட்டு, சிறிய மற்றும் சுறுசுறுப்பான ஏஐ (AI) சார்ந்த குழுக்களை உருவாக்க மெட்டா திட்டமிட்டுள்ளது. தங்களுக்குப் பணிநீக்கம் குறித்த மின்னஞ்சல் வந்ததும் ஊழியர்களின் அலுவலக அணுகல் அடையாள அட்டைகள் (ID badges) உடனடியாக முடக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிறுவனத்தின் எதிர்கால இலக்குகள், ஊழியர்களின் தற்போதைய திறன்களுடன் ஒத்துப்போகாத காரணத்தாலேயே இந்தத் தரம் பிரிப்பு நடந்ததாக நிர்வாகம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் பலர், தாங்கள் நீண்டகாலமாக நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்திருந்தாலும், தொழில்நுட்ப மாற்றங்களால் திடீரென வேலையிழந்தது மிகுந்த மனவேதனையைத் தருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

பணியில் இருந்தபோது ஊழியர்கள் ஏஐ சிஸ்டம்களுக்குத் பயிற்சி அளித்து வந்ததாகவும், அந்த ஏஐ தொழில்நுட்பமே தற்போது அவர்களது இடத்தைப் பிடித்துவிட்டதாகவும் சில ஊழியர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான ரகசிய ஆடியோ கிளிப் ஒன்றும் இணையத்தில் வைரலாகி, மெட்டா நிறுவனத்தின் மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ளது. மெட்டாவின் இந்த முடிவுக்குப் பின்னால் பலமான நிதி மற்றும் தொழில்நுட்பக் காரணங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் பிற நிறுவனங்களுடன் போட்டியிடவும், முதலீடுகளை அந்தத் துறையில் குவிக்கவும் மெட்டா தீவிரமாக உள்ளது.

ஏற்கனவே பல கட்டங்களாகப் பணிநீக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட மெட்டா, இந்த முறை மிகவும் கடுமையான மற்றும் திடீர் மாற்றங்களைச் செய்துள்ளது. தனது நிறுவனத்தைச் சிறியதாகவும், செயல்திறன் மிக்கதாகவும் மாற்ற வேண்டும் என்ற ஜுக்கர்பெர்க்கின் நோக்கம், ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சூழலில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குத் தகுந்த இழப்பீட்டுத் தொகைகள் வழங்கப்படுமா மற்றும் அந்த ஊழியர்கள் மீண்டும் புதிய வேலைகளை எவ்வாறு தேடுவார்கள் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. தொழில்நுட்ப உலகின் இந்த மாற்றம், மெட்டா மட்டுமல்லாது பிற முன்னணி நிறுவனங்களிலும் இதேபோன்ற பணிநீக்கங்களுக்கு வழிவகுக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். செயற்கை நுண்ணறிவுத் துறையில் மெட்டா எடுத்துவரும் இந்த அதிரடி மாற்றங்கள், வரப்போகும் நாட்களில் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உதவும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com