அமெரிக்க விமான நிலையத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி! 2 போயிங் விமானங்கள் நேருக்கு நேர் மோதல்... 172 பேர் உயிர் தப்பியது எப்படி?

அந்த விமானத்தில் 166 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 172 பேர் பயணம் செய்தனர்.
அமெரிக்க விமான நிலையத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி! 2 போயிங் விமானங்கள் நேருக்கு நேர் மோதல்... 172 பேர் உயிர் தப்பியது எப்படி?
Published on: 
Updated on: 
2 min read

அமெரிக்காவின் மியாமி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு போயிங் விமானங்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் விமானமும் சரக்கு விமானமும் விமான நிலையத்திற்குள் தரையில் நகர்ந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு பயணிகளுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன. விமானத்தில் இருந்த 172 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் நவம்பர் 14ஆம் தேதி இரவு சுமார் 9.15 மணியளவில் இந்த விபத்து நடைபெற்றது. பனாமா நாட்டின் தலைநகர் பனாமா சிட்டியில் இருந்து கோபா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737 ரக பயணிகள் விமானம் மியாமிக்கு வந்திருந்தது. அந்த விமானத்தில் 166 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் என மொத்தம் 172 பேர் பயணம் செய்தனர்.

விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கிய பின்னர், பயணிகள் இறங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை நோக்கி விமானம் மெதுவாகச் சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில், யுபிஎஸ் (UPS) நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 767 ரக சரக்கு விமானம் கொலம்பியாவின் தலைநகர் பொகோட்டாவுக்குப் புறப்படுவதற்காக விமான நிலையத்தின் உள்ளே நகர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு விமானங்களும் சந்திக்கும் வகையில் அமைந்திருந்த டாக்ஸிவே எனப்படும் விமானங்கள் தரையில் செல்லும் பாதையின் சந்திப்புப் பகுதியில் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் கோபா ஏர்லைன்ஸ் விமானத்தின் இடதுபுற இறக்கையின் நுனிப்பகுதி, யுபிஎஸ் சரக்கு விமானத்தின் முன்பகுதியில் மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் சேதமடைந்தன. குறிப்பாக, பயணிகள் விமானத்தின் இடதுபுற இறக்கையின் நுனிப்பகுதி சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மோதல் ஏற்பட்ட உடனேயே விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட விமானிகளிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டனர். அப்போது, யுபிஎஸ் விமானம் செல்ல வேண்டிய தூரத்தைத் தாண்டி முன்னோக்கி நகர்ந்ததாக அதன் விமானி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இரண்டு விமானங்களும் ஒரே பகுதியில் மோதிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகமான FAA வெளியிட்ட தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கோபா ஏர்லைன்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தபோது, அதற்கு வழிவிடுமாறு யுபிஎஸ் விமானத்தின் பணியாளர்களுக்கு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்ததாக FAA தெரிவித்துள்ளது. அப்படி அறிவுறுத்தப்பட்டும் மோதல் ஏற்பட்டது எப்படி என்பது தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

விபத்தைத் தொடர்ந்து மீட்புப் படையினரும் மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கோபா விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில் இரண்டு பேருக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டதால் அவர்களுக்கு விமான நிலையத்திலேயே மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை. யுபிஎஸ் விமானத்தில் இருந்த பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது.

இந்தச் சம்பவத்தால் விமான நிலையத்தின் செயல்பாடுகள் முழுமையாக முடங்கவில்லை. மோதல் நடைபெற்ற பகுதியில் விமானங்களின் இயக்கம் மாற்றப்பட்டு, மாற்றுப் பாதைகள் வழியாக விமானங்கள் அனுப்பப்பட்டன. இதனால் மற்ற விமானங்களின் போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்றது. கோபா ஏர்லைன்ஸ் மற்றும் யுபிஎஸ் ஆகிய இரு நிறுவனங்களும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்துள்ளன.

இந்த விபத்து நடைபெற்றதற்கு முந்தைய நாள்தான் அமெரிக்கா முழுவதும் விமானப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் உத்தரவால் நாடு முழுவதும் பல விமானங்களின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, ஏராளமான பயணிகள் விமான நிலையங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தப் பாதிப்பிலிருந்து விமானப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் மியாமியில் இந்த மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் ஒரே பாதையின் சந்திப்புப் பகுதியில் எவ்வாறு வந்தன, கட்டுப்பாட்டு மையத்தின் அறிவுறுத்தல் ஏன் சரியாகப் பின்பற்றப்படவில்லை, விமானிகளின் செயல்பாட்டில் ஏதேனும் தவறு இருந்ததா என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு விசாரணைக்குப் பிறகே பதில் கிடைக்கும். விமான நிலையத்தின் தரைவழிப் போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் இந்தச் சம்பவம் மீண்டும் கவனத்தைத் திருப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.