மனைவியை துண்டுதுண்டாக நறுக்கி, மிக்ஸியில் கூழாக்கிய கணவன்! 'மிஸ் சுவிட்சர்லாந்து' இறுதிப் போட்டியாளரின் கொடூர மரணம்!

கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சுவிட்சர்லாந்தின் பின்னிங்கென் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் ...
model killed and pureed by husband
model killed and pureed by husband
Published on
Updated on
2 min read

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் நடந்துள்ள ஒரு பயங்கரமான கொலைச் சம்பவம், உலகையே உலுக்கியுள்ளது. முன்னாள் 'மிஸ் சுவிட்சர்லாந்து' அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டியாளரான கிறிஸ்தினா ஜோக்சிமோவிக் என்பவரை, அவருடைய கணவரே கொடூரமாகக் கொலை செய்திருக்கிறார். இந்தக் கொலையை அவர் அரங்கேற்றிய விதம் குறித்து, தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் வெளிவந்துள்ள தகவல்கள், பார்ப்பவர் நெஞ்சை உறைந்துபோகச் செய்கின்றன. அதாவது, மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பின்னர், அவரது உடலைத் துண்டுதுண்டாக வெட்டி, அந்தக் கூழாக்கிய உடற்பாகங்களைக் மிக்ஸி மூலம் மேலும் அரைத்து, பின்னர் இரசாயனக் கரைப்பானில் போட்டு அழித்துவிட முயன்றதாகக் கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முப்பத்தெட்டு வயதான கிறிஸ்தினா ஜோக்சிமோவிக், ஒரு காலத்தில் 'மிஸ் சுவிட்சர்லாந்து' பட்டத்தை வெல்லப் போட்டியிட்டவர். அவர், பின்னாளில் இளம் அழகிகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியை தொழிலைச் செய்து வந்தார். அவரது நாற்பத்து மூன்று வயதான சுவிஸ் நாட்டுக் கணவர்தான் இந்தக் கொலையைச் செய்தவர். கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், சுவிட்சர்லாந்தின் பின்னிங்கென் பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. ஆரம்பத்தில், தமது மனைவி திடீரென இறந்து கிடந்ததாகவும், பயத்தில் உடலைத் துண்டுகளாக வெட்டி மறைத்ததாகவும் கணவர் நாடகமாடியுள்ளார்.

எனினும், ஒரு மாதம் கழித்து அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆனால், தாம் தற்காப்பிற்காகவே மனைவியைக் கொன்றதாக அவர் தெரிவித்தார். அதாவது, மனைவி கத்தியால் தம்மைத் தாக்கியதால்தான் கொன்றதாக அவர் கூறியிருந்தார். ஆனால், நீதித்துறை ஆய்வில் கிடைத்த உடற்கூறு அறிக்கை அவரது இந்தக் கூற்றை முழுமையாக மறுத்தது. கிறிஸ்தினா ஜோக்சிமோவிக் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருப்பது உறுதியானது. தவிர, தற்காப்பிற்கான போராட்டம் எதுவும் நடந்ததற்கான தடயங்கள் இல்லை என்றும் தடயவியல் துறை அறிக்கையில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சித் தகவல்களைத் தொடர்ந்தே, அவர் மீது கொலை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்ததாக அதிகாரப்பூர்வமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கொலைக்குப் பின் அவர் செய்த காரியங்கள்தான் மிகவும் அதிர்ச்சியூட்டுகின்றன. மனைவியின் உடலை, அவர் ஒரு மர அறுவை இயந்திரம், ஒரு கத்தி மற்றும் தோட்டக் கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு துண்டுதுண்டாக வெட்டியுள்ளார். மேலும், அவர் உடற்பாகங்களில் சிலவற்றைக் மிக்சியை பயன்படுத்தி மிக நுண்ணிய கூழாக அரைத்துள்ளார். அதன் பிறகு, அந்தக் கூழாக்கப்பட்ட பாகங்களை ஒரு வேதியல் கரைப்பானில் போட்டு அழித்துவிட முயன்றதும் வெளிவந்துள்ளது. ஒரு மனித உயிர் மீது சிறிதும் இரக்கமில்லாத, உச்சபட்ச குற்ற மனப்பான்மையுடன் அவர் இந்தக் கொலையைச் செய்து, தடயங்களை மறைக்க முயன்றது நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

கொலையாளியான கணவருக்கு ஏற்கனவே வன்முறைப் பழக்கம் உண்டு என்றும், அவர் இதற்கு முன்பும் கிறிஸ்தினாவின் கழுத்தைப் பிடித்து நெரித்த வரலாறு உண்டு என்றும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இந்தக் கொலைக்கு முன்னரும் பலமுறை அவர் தமது மனைவியைத் தாக்கியுள்ளதும் விசாரணையில் வெளிவந்தது. இந்தக் கொடூரமான குற்றத்தைச் செய்த கணவர், தற்போது காவல்துறையின் காவலில் இருக்கிறார். விரைவில் இவருக்கான தண்டனை விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com