நேபாளத்தில் கடந்த (ஆக 26) ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு பெரும் உயிரிழப்பையும் பேரழிவையும் ஏற்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். வீடுகள், பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த பேரழிவுக்கு மத்தியில், ஆபத்தை முன்கூட்டியே உணர்ந்து விரைவாக செயல்பட்டு பள்ளித் தலைமையாசிரியர் ஒருவர் 1,643 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராகவும், ஆங்கில ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் 47 வயதான ராஜேந்திர தவாடி. புதன்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற தவாடிக்கு சுமார் 9.20 மணியளவில், நண்பர் ஒருவர் போன் செய்து, அருகிலுள்ள கிராமம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஆற்றில் வெள்ளம் அளவுக்கு அதிகமாக பெருக்கெடுத்து வருவதாகவும் எச்சரித்துள்ளார்.
ஆரம்பத்தில், பள்ளி ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில் இருந்ததால் மாணவர்களுக்கு உடனடி ஆபத்து இருக்காது என தவாடி நினைத்துள்ளார். ஆனால், சிறிது நேரத்தில் பள்ளிக்கு வந்த பெற்றோர் ஒருவர், ஆற்றின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து உடனடியாக தாமதிக்காமல் பள்ளி மணியை அடித்த தவாடி, அனைத்து மாணவர்களையும் வகுப்பறைகளில் இருந்து உடனடியாக வெளியேற்ற ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர்களையும் தொடர்புகொண்டு, மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல் பாதுகாப்பான இடத்திற்குத் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அப்போது, அவரால் தொடர்புகொள்ள முடியாத ஒரு பள்ளிப் பேருந்து ஏற்கெனவே பாலத்தைக் கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களும் பாதுகாப்பான உயரமான பகுதிகளை நோக்கி செல்லத் தொடங்கினர். ஒரு மாணவிக்கு மிகுந்த அச்சம் காரணமாக “panic attack” ஏற்பட்டதால், அவரை மோட்டார் சைக்கிளில் மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மற்ற மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியுடன் நடந்தும் ஓடியும் பாதுகாப்பான உயரமான இடங்களை அடைந்தனர்.
இறுதியில், மாணவர்கள் அனைவரும் மலைப்பகுதியில் இருந்த ஒரு அரச மரத்தின் கீழ் தஞ்சமடைந்தனர். அவர்கள் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே வெள்ளம் பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை சூழ்ந்துள்ளது. சேறு, பாறைகள், பனி மற்றும் இடிபாடுகளுடன் பெருக்கெடுத்த வெள்ளம், பள்ளி உள்ளிட்ட பல கட்டிடங்களையும் பாலங்களையும் அடித்துச் சென்றது. இருப்பினும், ராஜேந்திர தவாடியின் துரிதமான நடவடிக்கையால் பள்ளியில் இருந்த 1,643 மாணவர்களும் உயிருடன் மீட்கப்பட்டனர். பள்ளி ஊழியர்களில் பெரும்பாலானோரும் பாதுகாப்பாக தப்பினர்.
ஆயிரக்கணக்கான உயிர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், ஆபத்தை சில நிமிடங்களுக்கு முன்பே உணர்ந்து 1,643 மாணவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற தலைமையாசிரியர் ராஜேந்திர தவாடியின் நடவடிக்கை, இந்த பேரழிவில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாகப் பதிவாகியுள்ளது. மேலும் தலைமை பொறுப்பில் உள்ளவர் எவ்வாறு துரிதமாக செயல்பட்டு மற்றவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதையும் உணர்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்