மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோமுஸ் நீரிணையில் வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் அப்பாச்சி ஹெலிகாப்டர் பைலட்களை மீட்பதற்காக அமெரிக்க ராணுவம் முதன்முறையாக ஒரு அதிநவீன கடல் ட்ரோன் போட்டினைப் (Sea Drone Boat) பயன்படுத்தியுள்ளது. ஈரானிய ராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாகிக் கடலில் விழுந்த இரண்டு அமெரிக்க விமானிகளை, மனிதர்கள் யாரும் இல்லாத, முற்றிலும் ஏஐ (AI) தொழில்நுட்பத்தால் இயங்கும் ஒரு போட் பத்திரமாக மீட்டு சாதனை படைத்துள்ளது.
இந்த மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்ட கடல் ட்ரோன் போட்டின் பெயர் 'கோர்ஸேர்' (Corsair) ஆகும். இதனை டெக்சாஸ் மாகாணத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'சரோனிக் டெக்னாலஜிஸ்' (Saronic Technologies) என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர் விபவ் அல்டேகர் (Vibhav Altekar) என்ற இந்திய வம்சாவளி நபர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ராணுவம் இதுவரை வான்வெளியில் இயங்கும் ஏரியல் ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில், கடலில் தன்னாட்சியாக இயங்கும் ஒரு அசெட்டைக் (Autonomous Surface Vessel) கொண்டு இத்தகைய ஆபத்தான மீட்புப் பணியை நடத்தியது இதுவே முதல் முறையாகும்.
இந்த 'கோர்ஸேர்' கடல் ட்ரோன் போட் சுமார் 24 அடி நீளம் கொண்டது. டீசல் எரிபொருளில் இயங்கும் இந்த போட், கடலில் அதிகபட்சமாக 35 நாட்ஸ் (Knots) வேகத்தில் பயணிக்கக் கூடிய வல்லமை பெற்றது. சுமார் 1,000 பவுண்ட் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த போட், 1,000 நாட்டிக்கல் மைல்களுக்கு மேல் தடையின்றிப் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் ரிமோட் மூலம் கட்டுப்படுத்தினாலும், கடலின் அலைகள் மற்றும் ஆபத்துகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் இது தானாகவே கணித்துச் செயல்படுகிறது.
ஈரான் ராணுவத்தின் தீவிரக் கண்காணிப்புப் பகுதியான ஹோமுஸ் நீரிணையில் மனிதர்கள் கொண்ட மீட்புக் குழுவை அனுப்பினால் அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்படலாம் என்ற அச்சத்தில், அமெரிக்காவின் சென்ட்காம் (CENTCOM) இந்த கடல் ட்ரோனை அனுப்பியது. ஈரானின் ரேடார்களில் சிக்காமல் மிகக் குறுகிய நேரத்தில் சென்று பைலட்களை மீட்ட இந்தச் சம்பவம், நவீன போர்க்களத்தில் கடல்சார் ட்ரோன்களின் முக்கியத்துவத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தின் பின்னணியில் ஒரு இந்திய வம்சாவளியின் நிறுவனம் இருப்பது இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.