

நேற்றைய தினம் துபாயில் இருந்து இஸ்ரேல் தலைநகரான டெல்-அவிவ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஃப்ளைதுபாய் நிறுவனத்தின் FZ 1073 விமானம் எதிர்பாராத விபத்தைச் சந்தித்தது.
2 மணி நேரத்துக்கும் மேலாக அமைதியாகப் பறந்து கொண்டிருந்தது விமானம். 34,000 அடி உயரத்தில் பயணிகள் அழகான காலை வானத்தை ரசித்துக் கொண்டிருந்தனர்.
திடீரென விமானிகள் அறையில் இருந்து அலறல் சத்தம் எழ, 2 நிமிடங்களில் 17,000 அடி கீழே சரிந்தது விமானம். மரண பயத்தில் மொத்த விமானமும் அலறியது.
உடனடியாக சுதாரித்த விமானப் பணிக்குழுவினரும், சில பயணிகளும் விமானிகள் அறையை நோக்கி ஓடினர். அங்கே ஒரு விமானி ரத்தம் வழிய, மற்றொரு விமானியுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.
கத்தியால் குத்தியவர் ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானி. அவர் கடந்த 9 மாதங்களாக மட்டுமே ஃப்ளைதுபாயில் விமானியாகப் பணியாற்றுகிறார். காயமடைந்தவர் ஸ்மித் மச்சார் என்ற இந்திய விமானி.
காக்பிட் எனப்படும் விமானிகள் அறைக்குள் சென்று பார்த்த இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பயணி யானிவ் ஹயூன், கத்தியால் சக விமானியைக் குத்திய ஓமன் நாட்டைச் சேர்ந்த விமானியின் கழுத்தை நெரித்து, விமானிகள் அறைக்கு வெளியே கொண்டு வந்துள்ளார்.
அப்போது விமானம் செங்குத்தாகத் தரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது Air Crash Investigation என்ற ஆவண தொடரைப் (Docu-Series) பார்த்த அனுபவத்தை வைத்து, விமானத்தின் கட்டுப்பாட்டுக் கைப்பிடியை இழுத்து, கீழே விழாமல் விமானத்தைச் சமநிலைப்படுத்தினார்.
ஸ்விகா மெனஸ், அசாஃப் ரஜுவான் மற்றும் சில பயணிகள் இணைந்து, வெளியே இழுத்து வரப்பட்ட ஓமன் நாட்டு விமானியை ஹெட்ஃபோன் வயர்கள் மற்றும் கையில் கிடைத்த பிளாஸ்டிக் கயிறுகளை வைத்து கட்டிப்போட்டு கட்டுப்படுத்தியுள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் 39 வயது அனுபவமிக்க விமானி. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்துக்குச் சொந்தமான குறைந்த கட்டண விமான நிறுவனமான ஃப்ளைதுபாயில் நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
விமானிகள் அறைக்குள் சினிமாத்தனமான கத்திக்குத்து... யாரும் எதிர்பார்க்காத சம்பவம். ஆனால், ஒரு விமானி எதிர்பாராத சம்பவங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறார். சரணடைவதற்குப் பதிலாக சண்டையிடுகிறார் ஸ்மித்.
வயிற்றில் இருந்து ரத்தம் சிந்தியபோதும், தன்னை நம்பியிருக்கும் 180 உயிர்களுக்குப் பொறுப்பேற்கிறார். எப்படியோ விமானிகள் அறைக்கான கதவைத் திறந்து, உதவிக்கு பயணிகள் வர வழிசெய்கிறார்.
ஓராண்டுக்கு முன்பு அளித்த நேர்காணலில் ஸ்மித் இவ்வாறு கூறியிருக்கிறார்:
"நாம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், நம்மை யார் காப்பாற்றுவார்கள்? பொதுமக்கள் விமானப் பணியாளர்களைச் சாதாரணமாகப் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், வானில் விஷயங்கள் தவறாகப் போகும்போது, உங்களுக்கு அவர்களின் உதவி கண்டிப்பாகத் தேவைப்படும்."
தனது வார்த்தைகளில் சொன்னதை, வாழ்க்கையிலும் தைரியமாகச் செயல்படுத்தியிருக்கிறார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், இந்திய பிரதமர் மோடியும் அவரை ஹீரோ எனக் கொண்டாடுகின்றனர். பாதுகாப்பாக இஸ்ரேல் திரும்பிய பயணிகளின் குடும்பத்தினர் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றனர். இனி வானில் பறக்கப்போகும் ஒவ்வொரு விமானிக்கும் துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக ஸ்மித் திகழ்வார்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஒரு மணி நேரத்தில் விமானம் சௌதியில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. சௌதி மருத்துவமனையில் விமானி ஸ்மித் சிகிச்சை பெற்று வருகிறார்.
பிடிபட்ட ஓமன் விமானியிடம் சௌதி அதிகாரிகள் முதற்கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள அடிப்படைக் காரணங்களும் நோக்கங்களும் இன்னும் அறியப்படவில்லை என்றும், இது ஒரு முறையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் ஃப்ளைதுபாய் நிறுவனம் கூறியுள்ளது. மேலும், ஓமன் நாட்டு விமானியின் பெயரையும் நிறுவனம் வெளியிடவில்லை.
இஸ்ரேல் அதிகாரிகள், இது ஒரு தீவிரவாதத் தாக்குதலுக்கான முயற்சியாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதல் போன்ற ஒன்றைத் திட்டமிட்டிருக்கலாம் அல்லது பயணிகளுடன் விமானத்தைக் கடத்த முயன்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
சௌதியில் காயமடைந்த இஸ்ரேல் பயணிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் குறித்து இஸ்ரேல் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
இஸ்ரேலுக்கு வரும் அனைத்து விமானங்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் செல்லும் துபாய் ஃப்ளை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்