தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளை ஓட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்தநாளையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த நிலையில், நினைவிடத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோரும் மரியாதை நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதனிடையே, காந்தி ஜெயந்தி நாளில் அவருக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மகாத்மாவின் கற்பனைகள் நமது பாதையை ஒளியூட்டி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவருடைய சிந்தனைகள் உலகமயமானது என்றும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தை வளர்க்க அனைவரையும் ஊக்கப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளை ஓட்டி, அவருக்கும் எக்ஸ் தளத்தில் மரியாதை செலுத்தியுள்ளார். அவரது எளிமை மற்றும் நாட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவுகூர்வதாகவும், ஜெய் ஜவான் ஜெய் கிசான் முழக்கம் இன்றளவும் எதிரொலிப்பதாகவும் கூறியுள்ளார். சவாலான காலத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் தலைமைத்துவத்திற்கு அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு முன்மாதிரியானது என்றும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்.