"27 வயது பெண் திடீர் மரணம்..." - மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தும் 'நுரையீரல் Plague' நோயின் ஆபத்து!

அவருடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் சுமார் 200 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Pneumonic Plague Russia
Pneumonic Plague Russia
Published on: 
Updated on: 
2 min read

பல ஆண்டுகளுக்கு முன்பு உலகையே அச்சுறுத்திய “Plague” எனப்படும் பிளேக் நோய், தற்போது மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. இளம் பெண் ஒருவர் கடுமையான நுரையீரல் பாதிப்புடன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவர் Pneumonic Plague எனப்படும் நுரையீரல் பிளேக்கால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அவருடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படும் சுமார் 200 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். ஆரம்பகட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று இருப்பதற்கான அறிகுறிகள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் 27 வயதான Daria Sh. என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மருத்துவ ஆய்வகத்தில் பணியாற்றி வந்ததாகவும், குறிப்பாக பிளேக் நோயை ஆய்வு செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான நிமோனியா போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமடைந்ததால் செயற்கை சுவாசக் கருவியின் உதவியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 2ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்தது ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள Irkutsk பிராந்தியத்தில்.

அங்குள்ள Anti-Plague Institute-ல் அந்தப் பெண் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்துக்குப் பிறகு அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அதிகாரிகள் அடையாளம் காணத் தொடங்கினர். சுமார் 200 பேர் வரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலர் மருத்துவமனைகளில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் எப்படி ஏற்பட்டது என்பதில் இன்னும் முழுமையான தெளிவு கிடைக்கவில்லை. ஆனால் சில ஊடகத் தகவல்களின்படி, ஆய்வகத்தில் உயிருடன் இருந்த பிளேக் பாக்டீரியா கொண்ட பரிசோதனை குழாய் ஒன்று உடைந்ததாக அந்தப் பெண் மருத்துவ ஊழியர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. அவர் சமீபத்தில் மேற்கொண்ட பணிப் பயணத்தின்போது தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்ற மற்றொரு கோணமும் விசாரணையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு தேவையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட முடிவுகளில் கண்காணிப்பில் உள்ளவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மத்தியில் உடனடியாக பெரிய அளவிலான தொற்று பரவல் ஏற்பட்டுவிட்டதாக கூற முடியாது.

அப்படியானால் Pneumonic Plague என்றால் என்ன? பிளேக் நோயை ஏற்படுத்துவது Yersinia pestis என்ற பாக்டீரியா. பொதுவாக சிறிய பாலூட்டிகள் மற்றும் அவற்றின் உடலில் இருக்கும் பாதிக்கப்பட்ட பூச்சிகள் மூலம் மனிதர்களுக்கு இந்த நோய் பரவக்கூடும். பிளேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் Bubonic Plague பொதுவாக நிணநீர் சுரப்பிகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும். ஆனால் Pneumonic Plague நேரடியாக நுரையீரலை பாதிக்கும் மிகவும் தீவிரமான வகையாகும்.

நுரையீரல் பிளேக்கின் முக்கிய அறிகுறிகள் திடீர் காய்ச்சல், குளிர்ச்சியுடன் நடுக்கம், கடுமையான இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, உடல் வலி மற்றும் அதிகமான சோர்வு போன்றவையாக இருக்கலாம். சில நேரங்களில் நோய் வேகமாக தீவிரமடையக்கூடும். அதனால் அறிகுறிகள் தோன்றிய பிறகு உடனடியாக மருத்துவ உதவியை பெறுவது மிகவும் முக்கியம்.

குறிப்பாக Pneumonic Plague-ல் மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது. பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போது அல்லது சுவாசிக்கும்போது வெளியேறும் தொற்று துகள்கள் மூலம் அருகில் இருப்பவர்களுக்கும் பாக்டீரியா பரவக்கூடும். அதனால் சந்தேகத்திற்குரிய நோயாளிகளை தனிமைப்படுத்தி, மருத்துவ பணியாளர்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிகிச்சை அளிப்பது முக்கியமானதாகிறது. பிளேக் என்ற பெயர் கேட்டவுடன் பலருக்கும் வரலாற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரிழப்புகள் நினைவுக்கு வரலாம்.

ஆனால் இன்றைய காலத்தில் இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான Antibiotic சிகிச்சையை தொடங்கினால் உயிரைக் காப்பாற்ற முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சிகிச்சை தாமதமாகும்போதுதான் ஆபத்து அதிகரிக்கிறது.

தற்போதைய சம்பவத்தில் நோய் உண்மையில் Pneumonic Plague தானா என்பதையும், அந்தப் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்ட விதத்தையும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை பொதுமக்களிடையே பெரிய அளவில் தொற்று பரவியதாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், ஆய்வகங்களில் ஆபத்தான தொற்று நோய்களை கையாளும்போது பாதுகாப்பு நடைமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பதையும், அரிதாக காணப்படும் நோய்கள்கூட சரியான நேரத்தில் கண்டறியப்பட வேண்டிய அவசியத்தையும் இந்த சம்பவம் மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com