"நீங்க இதை காமமா பார்க்காத வரை.. மார்பை காட்டுவேன்" - பிரான்ஸ் பாடகியின் துணிச்சல் 'புரட்சி'

அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக தனது உடலைக் கொண்டு அவர் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம், தற்போது உலகெங்கும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
rebecca-baby-lulu-van-trapp-band topless
rebecca-baby-lulu-van-trapp-band topless
Published on
Updated on
2 min read

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பாப் இசைக்குழுவான 'Lulu Van Trapp'-இன் முன்னணி பாடகி ரெபேக்கா பேபி, பொதுவெளியில் எதிர்கொண்ட ஒரு கசப்பான அனுபவம், கலை மற்றும் கலாச்சார உலகில் தற்போது ஒரு புதிய விவாதத்தைத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது ஒரு சிலரால் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை அடுத்து, அதற்கு எதிராக தனது உடலைக் கொண்டு அவர் நடத்திய அரைநிர்வாணப் போராட்டம், தற்போது உலகெங்கும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களின் உடல் பாலியல் ரீதியாகப் பார்க்கப்படுவதை எதிர்த்து, துணிச்சலுடன் அவர் எடுத்த முடிவு தற்போது விவாதத்துக்கு உள்ளாகியுள்ளது.

பிரான்சின் இன் மாகாணத்தில் உள்ள 'Le Cri de la Goutte' என்ற ஒரு பெரிய இசை விழாவில், 'Lulu Van Trapp' இசைக்குழு இசை நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ரெபேக்கா பேபி ரசிகர்களுக்கு அருகில் சென்று பாடினார். அப்போது, ஒரு சில ஆண்கள் கூட்டத்தில் அவரை அத்துமீறித் தொட்டு, பாலியல் ரீதியாக எல்லை மீறியதாக தெரிகிறது. இந்த அநாகரிகமான செயலால் மிகவும் பாதிக்கப்பட்ட பாடகி, உடனே மேடைக்குத் திரும்பினார். அந்தக் கணம், கலை நிகழ்ச்சியின் ஒரு பகுதி ஒரு போராட்ட களமாக மாறியது. தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, தனது மேல் சட்டையைக் கழற்றிவிட்டு, மேடையில் அரைநிர்வாணமாக நின்றார்.

அந்த நிலையில், அவர் ரசிகர்களைப் பார்த்து உரத்த குரலில், "ஒரு பெண் அரைநிர்வாணமாக இருப்பதைக் கூட பாலியல் ரீதியாக மட்டுமே பார்க்கும் இந்த சமுதாயத்திற்கு ஒரு பாடம் புகட்ட விரும்புகிறேன். அதுவரை நான் இப்படியே இருப்பேன்" என்று அறிவித்தார். பாலியல் ரீதியாக ஒரு பெண்ணின் உடல் ஒரு பொருளாக பார்க்கப்படுவதை எதிர்த்து, அவர் தனது உடலை ஒரு போராட்டக் கருவியாகப் பயன்படுத்தினார். இந்தச் செயல், அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு ஒரு பெரும் அதிர்ச்சியையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இந்தச் செயலின் மூலம், பெண்களின் உடலுக்கு இருக்கும் புனிதத்தன்மை மற்றும் அதை மற்றவர்கள் அணுகும் விதம் குறித்த ஒரு பெரிய கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து, இசை விழாவின் ஏற்பாட்டாளர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் ரெபேக்கா பேபிக்கு முழு ஆதரவு தெரிவித்ததுடன், அங்கு நடந்த 'ஏற்றுக்கொள்ள முடியாத' சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இசைக்குழுவான 'Lulu Van Trapp'-உம் ஏற்பாட்டாளர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தது. பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவின. ரெபேக்கா பேபியின் துணிச்சலான போராட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். "பெண்களின் கண்ணியத்தையும், உடலின் சுதந்திரத்தையும் நிலைநிறுத்த அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை" என பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com