மெக்கா மசூதியில் முத்தமிட்டதற்காக மரண தண்டனையா? வலுக்கும் கண்டனங்கள்.. ‘தகாத செயல்’ என்பதன் பின்னணி என்ன?

அக்டோபர் 11ஆம் தேதி நஸ்ருலுடன் கடைசியாகப் பேசியதாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக
saudi arabia Executes
Published on: 
Updated on: 
2 min read

சவூதி அரேபியாவின் புனித நகரமான மெக்காவில் உள்ள மசூதியில் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பங்களாதேஷ் நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவம்,  அவர்களின் குற்றம் என்ன, விசாரணை முறையாக நடைபெற்றதா, பங்களாதேஷ் தூதரகத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சவூதி அரேபியாவின் உள்துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, வங்கதேசத்தை நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பஷீர் மற்றும் சித்தி அக்தர் ஆகிய இருவருக்கும் மெக்காவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசூதிக்குள் இருவரும் “ஒழுக்கக்கேடான செயல்களில்” ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்கள் செய்ததாகக் கூறப்படும் செயல் என்ன என்பது குறித்து சவூதி அதிகாரிகள் விரிவான விளக்கம் அளிக்கவில்லை. அவர்கள் முத்தமிட்டுக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவினாலும், இதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், குற்றத்தின் தன்மை, கைது செய்யப்பட்ட சூழல், விசாரணை நடைபெற்ற விதம் ஆகியவை குறித்த தெளிவான தகவல்கள் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷின் பிரம்மன்பரியா பகுதியைச் சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம், கடந்த 2022ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளார். மெக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராமில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டு, அதன் பின்னர் சிறையில் இருந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர். அக்டோபர் 11ஆம் தேதி நஸ்ருலுடன் கடைசியாகப் பேசியதாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகு அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக தொலைபேசி மூலம் தகவல் கிடைத்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நஸ்ருலின் தந்தை அப்துல் பஷீர், தனது மகனுக்கு நியாயமான விசாரணை வழங்கப்பட்டதா என்று கேள்வியை எழுப்பியுள்ளார். தனது மகன் குற்றமற்றவர் எனக் குடும்பத்தினர் கருதுவதாகவும், அவருக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நஸ்ருலுக்கும் சித்தி அக்தருக்கும் என்ன உறவு என்பது குறித்தும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. நஸ்ருலின் தந்தை, சித்தியைத் தங்களுக்குத் தெரியாது என்றும், இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றியதாக கேள்விப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், இருவரின் உறவு குறித்த விவரங்களும் இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை.

இந்தச் சம்பவத்தில் இருவரின் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்பே பங்களாதேஷ் தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா என்ற கேள்வி தொடர்ந்து வைக்கப்டுகிறது. தகவலின்படி, ஜெட்டாவில் உள்ள பங்களாதேஷ் துணைத் தூதரகம் செப்டம்பர் மாதம் சவூதி சிறைகளில் இருந்த பங்களாதேஷ் நாட்டினரின் பட்டியலைப் பெற்றுள்ளது. அந்தப் பட்டியலில் நஸ்ருல் மற்றும் சித்தி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், மரணதண்டனை தொடர்பான தகவல் இடம்பெறவில்லை என செய்தி தெரிவிக்கிறது.

இருவரும் தூதரக உதவியைக் கோரவில்லை என்று தூதரகம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், கைது செய்யப்பட்டபோது அவர்களுக்குத் தூதரக உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்பது குறித்து தெளிவான விவரங்கள் வெளியாகவில்லை.

சவூதி அரேபியா மரணதண்டனையை அதிக அளவில் நிறைவேற்றும் நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மனித உரிமைகள் அமைப்புகள் அந்நாட்டின் மரணதண்டனை நடைமுறைகள் மற்றும் நீதிமன்ற விசாரணைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகின்றன. இந்தச் சம்பவத்திலும், குற்றச்சாட்டுகளின் முழு விவரங்கள் வெளியிடப்படாதது, விசாரணையின் நியாயத்தன்மை குறித்த தகவல்கள் இல்லாதது, தூதரகத்துக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதா என்ற சந்தேகம் ஆகியவை சர்ச்சையை அதிகரித்துள்ளன.

இருவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், அவர்களின் உடல்களைப் பங்களாதேஷுக்குக் கொண்டு செல்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள் காட்டிய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் சவூதி அரேபியாவிடமிருந்து கூடுதல் விளக்கங்கள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com